ஓமைக்ரானை கண்டறியும் டாடா நிறுவனத்தின் OmiSure டெஸ்ட் கிட் – ஐசிஎம்ஆர் ஒப்புதல்

ஓமைக்ரான் வேரியண்ட் கொரோனா தொற்றை கண்டறியும், Tata நிறுவனத்தின் OmiSure எனும் டெஸ்ட் கிட்டுக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது.

2020, 2021 என இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸின் கோரத் தாண்டவத்தை உலக நாடுகள் சந்தித்து வருகின்றன. 2022 எனும் புதிய ஆண்டிலும் ஓமைக்ரான் எனும் புதிய வேரியண்ட் மூலம் கொரோனாவின் அச்சுறுத்தல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதுவரை கண்டறியப்பட்ட வேரியண்ட்களை விட ஓமைக்ரான் மிக ஆபத்தான வேகத்தில் பரவி வருவதும், தடுப்பூசி திறனை கணிசமான அளவில் பாதிப்பதும் ஓமைக்ரான் மீதான அச்சத்தை அதிகப்படுத்தி இருக்கிறது.

அசுர வேகத்தில் பரவி வரும் இந்த ஓமைக்ரான் தொற்றை துல்லியமாக கண்டறிய தற்போது இந்தியாவில் காலதாமதம் ஏற்படுகிறது. ஏனெனில் பிற கொரோனா வேரியண்ட்களை கண்டறியும் ஆர்.டி.பி.சி.ஆர் உள்ளிட்ட சோதனை முறைகளின் மூலம் ஓமைக்ரானை கண்டறிய முடியாது. இந்தியாவில் தற்போது தெர்மோ ஃபிஷர் எனும் அமெரிக்க அறிவியல் கருவி நிறுவனம் தயாரித்த டெஸ்ட் கிட் மூலம் தான் ஓமைக்ரான் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. S Gene Target Failure (SGTF) என்ற சோதனை முறை மூலம் ஓமைக்ரான் தொற்று கண்டறியப்படுகிறது.

கொரோனா வைரஸில் உள்ள ‘S’ Gene, ORF, ‘N’ gene, Rdrp, ‘E’ gene போன்ற ஜீன்கள் டார்க்கெட் செய்யப்பட்டு இந்த சோதனை நடத்தப்படுகிறது

இதனிடையே தற்போது, உள்நாட்டு நிறுவனமான மும்பையைச் சேர்ந்த டாடா மருத்துவம் மற்றும் நோயறிதல் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ள OmiSure எனப்படும் பிரத்யேக ஓமைக்ரான் கண்டறியும் டெஸ்ட் கிட்டுக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான ஒப்புதல் கடந்த ஆண்டு டிசம்பர் 30ம் தேதியன்று கொடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

டாடா நிறுவனத்தின் புதிய பரிசோதனை கிட்டுக்கு ICMR ஒப்புதல் கிடைத்திருப்பதன் மூலம் ஓமைக்ரான் தொற்றை விரைவாக கண்டறிய முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஓமைக்ரானுக்கு எதிரான சுகாதாரத்துறையின் நடவடிக்கைக்கு இது பலம் சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது.

இதுவரை இந்தியாவில் 23 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 1,892 பேருக்கு ஓமைக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 766 பேர் குணமடைந்துள்ளனர். அதிகபட்சமாக மகாராஷ்டிர மாநிலத்தில் 568 பேரும், டெல்லியில் 382 பேரும், கேரளாவில் 185 பேரும், ராஜஸ்தானில் 174 பேரும், குஜராத்தில் 152 பேரும், தமிழகத்தில் 121 பேரும் ஓமைக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.