வெஸ்ட் இண்டீஸ் அணியின் தேர்வாளராக சர்வன் நியமனம்.

ஒரு காலத்தில் யாரும் அசைக்க முடியா ஜாம்பவான் அணியாக இருந்த வெஸ்ட் இண்டீஸ், அண்மைக்காலமாக சொதப்பலான ஆட்டத்தால் மோசமான அணியாக திகழ்கிறது. பல சிறந்த வீரர்களை பெற்றிருந்தாலும், அந்த அணியின் செயல்பாடு சிறப்பாக இல்லை.

கடந்த 2021ஆம் ஆண்டு நடந்த டி20 உலக கோப்பையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வெஸ்ட் இண்டீஸ் அணி சொதப்பலாக ஆடி சூப்பர் 12 சுற்றுடனேயே வெளியேறியது.

மேலும் 2022 மற்றும் 2024ஆம் ஆண்டுகளில் டி20 உலக கோப்பை, 2023ஆம் ஆண்டு ஒருநாள் உலக கோப்பை என அடுத்த 3 ஆண்டுகள் தொடர்ச்சியாக உலக கோப்பை தொடர்கள் நடக்கவுள்ளதால், அவற்றிற்கான அணியை கட்டமைக்க வேண்டிய கட்டாயத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி உள்ளது.

இந்நிலையில், அந்த பொறுப்பு சிறந்த முன்னாள் ஜாம்பவான்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 2024ஆம் ஆண்டு வரை வெஸ்ட் இண்டீஸ் அணியின் தலைமை தேர்வாளராக தேஸ்மண்ட் ஹைன்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். தேர்வுக்குழுவில் முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவானான ராம்நரேஷ் சர்வான் இடம்பெற்றுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டில் 2000ஆம் ஆண்டு அறிமுகமான சர்வான், வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 87 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 5842 ரன்களையும், 181 ஒருநாள் போட்டிகளில் ஆடி 5804 ரன்களையும் குவித்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக மிகச்சிறந்த பங்காற்றிய ஜாம்பவான் கிரிக்கெட்டர் சர்வான். இந்நிலையில் அவரிடம் வெஸ்ட் இண்டீஸ் அணி தேர்வு பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.