கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு சொகுசு ரயில்

ரயில் சேவையின் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் மற்றுமொரு படியாக தலைநகர் கொழும்பில் இருந்து வடக்கில் காங்கேசன்துறைக்கு செல்லும் பயணிகளுக்காக சகல வசதிகளுடன் கூடிய சொகுசு புகையிரத சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

நேற்று காலை தொடங்கப்பட்ட , இந்த சொகுசு ரயில் கல்கிசை ரயில் நிலையத்தில் இருந்து காலை 5.10 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 12.17 மணிக்கு காங்கேசன்துறை ரயில் நிலையத்தை சென்றடையும். அதே ரயில் காங்கேசன்துறையிலிருந்து பிற்பகல் 1.15 மணிக்குப் புறப்பட்டு இரவு 8.25 மணிக்கு கல்கிசை வந்தடையும் விதத்தில் நேர அட்டவனை தயாரிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய தொழில்நுட்பத்துடன் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட, 520 இருக்கைகள் கொண்ட இந்த ரயிலில் 10 பெட்டிகள் மற்றும் 02 ஆற்றல் இயந்திரங்கள் உள்ளன, இவை அனைத்தும் குளிரூட்டப்பட்டவை. மேலும், இந்த ரயிலில் பயணிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க ரயில்வே துறை நடவடிக்கை எடுத்துள்ளது. வசதியான இருக்கைகள், உணவருந்துவதற்கு ஒரு உணவருந்தும் வசதி, டிவி சேவை மற்றும் நவீன கழிப்பறை வசதிகள் ஆகியவை இதில் அடங்கும்.

இந்த ரயிலின் சேவைகளைப் பெற விரும்பும் பயணிகள், ஒரு மாதத்திற்கு முன்பே ஆன்லைனில் இ-டிக்கெட்டுகளை வாங்க முடியும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்திய கடன் உதவித் திட்டத்தின் கீழ் கொள்வனவு செய்யப்பட்ட இந்த ரயிலின் பெறுமதி 2500 மில்லியன் ரூபாவாகும். இந்த ரயிலை பாதுகாக்க ரயில்வே துறை சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.

இந்த ரயில் சேவையின் ஆரம்ப சேவை , போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தலைமையில் கல்கிசை புகையிரத நிலையத்தில் இடம்பெற்றது. அதன் பின்னர் கல்கிசை புகையிரத நிலையத்தில் இருந்து கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் வரை ரயிலில் பயணித்த அமைச்சர், புகையிரத பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர மற்றும் அதிகாரிகள் குழுவுடன் சென்றிருந்தார்.

Leave A Reply

Your email address will not be published.