முதல்நாள் ஆட்ட நேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 17/1.

இந்திய கிரிக்கெட் அணி, தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் செஞ்சூரியனில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்திலும், ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த 2-வது டெஸ்டில் தென்ஆப்பிரிக்க அணி 7 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி கண்டது. இதனால் இந்த தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

இந்த நிலையில் தொடரை வெல்லப்போவது யார்? என்பதை நிர்ணயிக்கும் இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியது.

இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி முதலில் பேட்டிங்கை துவங்கிய இந்திய அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது. துவக்க ஆட்டக்காரர் கே.எல் ராகுல் (12 ரன்கள்), மயங்க் அகர்வால் ( 15 ரன்கள்), புஜாரா (43 ரன்கள்) என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கோலி 79 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். ரகானே (9 ரன்கள்) ஏமாற்றினார். பின்வரிசை வீரர்கள் விரைவாக ஆட்டமிழந்ததால் இந்திய அணி 77.3 ஓவர்களில் 223 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. தென்ஆப்பிரிக்கா தரப்பில் பந்து வீச்சில் அதிகபட்சமாக ரபாடா 4 விக்கெட்டுகளையும், ஜேன்சன் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதையடுத்து தென்ஆப்பிரிக்கா அணி தனது முதல் இன்னிங்சில் களமிறங்கியது. தென் ஆப்பிரிக்க அணியின் சார்பில் டேன் எல்கர் மற்றும் மார்க்ரம் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். இந்த ஜோடியில் கேப்டன் எல்கர் 3 ரன்களில் பும்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து மார்க்ராமுடன், மகராஜ் ஜோடி சேர்ந்தார். இதனையடுத்து முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. அதில் தென்ஆப்பிரிக்க அணி 8 ஒவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 17 ரன்கள் எடுத்துள்ளது.

இதன்மூலம் தென்ஆப்பிரிக்க அணி இந்திய அணியை விட 206 ரன்கள் பின்தங்கி உள்ளது. இரண்டாம் நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.