பஞ்சாப் சட்டமன்ற தேர்தல் பிப்.20ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

பஞ்சாப் சட்டமன்ற தேர்தல் பிப்.14ம் தேதிக்கு பதிலாக பிப்.20ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

குரு ரவிதாஸ் ஜெயந்தியையொட்டி, பிப்ரவரி 10ம் தேதி முதல் 16ம் தேதி வரை உத்தரப் பிரதேசத்தில் உள்ள வாரணாசிக்கு பஞ்சாப் மக்கள் புனித பயணம் மேற்கொள்வது வழக்கம். இந்தநிலையில், பஞ்சாபில் பிப்.14ம் தேதி சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனால், பிப்.14ம் தேதி தேர்தல் நடந்தால், பெரும்பாலான மக்களால் வாக்களிக்க முடியாமல் போகலாம் என்ற நிலை ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து, பஞ்சாப் அரசியல் கட்சித் தலைவர்கள் தேர்தல் தேதியை மாற்றி அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து, பஞ்சாப் சட்டமன்ற தேர்தலை குறைந்தது 6 நாட்களுக்கு ஒத்திவைக்க வேண்டும் என பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை விடுத்து கடிதம் அளித்திருந்தார்.

இந்நிலையில், பல்வேறு தரப்பு கோரிக்கைகளை ஏற்று, பஞ்சாப் சட்டமன்ற தேர்தல் பிப்.14ம் தேதிக்கு பதிலாக பிப்.20ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.