இழப்பதற்கு உயிரைத் தவிர வெறெதுவும் இல்லா நிக்கரகுவா : சுவிசிலிருந்து சண் தவராஜா

மத்திய அமெரிக்க நாடான நிக்கரகுவாவில் அரசுத் தலைவராக டானியல் ஒர்டேகா நான்காவது தடவையாகப் பதவியேற்றுள்ளார்.

யனவரி  10ஆம் திகதி நடைபெற்ற இந்தப் பதவியேற்பு விழாவில் கியூப அதிபர் மிகுவேல் டியஸ் கனல், வெனிசுவெலா அதிபர் நிக்கலஸ் மடுரோ ஆகியோர் நேரில் கலந்துகொண்டு வாழ்த்துத் தெரிவித்தனர்.

அத்தோடு சீனா மற்றும் ரஸ்யா உட்பட பல நாடுகளின் உயர்மட்ட அதிகாரிகளும் அழைப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த அழைப்பு அதிதிகளுள் அமெரிக்கரான எஸ். பிரையன் வில்சனும் அடக்கம். வியட்நாம் போரில் பங்கு கொண்ட அமெரிக்கரான இவர் போர்களுக்கு எதிரான போராட்டங்களில் முன்நிற்பவர்.

1987ஆம் ஆண்டு, எல்-சல்வடோர் நாட்டில் ஆயுத மோதல்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்த கொலைக் குழுக்களுக்கு ஆயுத விநியோகம் இடம்பெறுவதைத் தடுக்கும் நோக்குடன் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் ஆயுதங்களை ஏற்றிச் சென்ற தொடருந்தை மறிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார். இவர்மீது வேண்டுமென்றே தொடருந்து ஏற்றப்பட்டதில் தனது கால்கள் இரண்டையும் பறிகொடுத்தவர். இவர் நிக்கரகுவாவில் ஒரு வீரராக மதிக்கப்படுகின்றார்.

உலகின் பல நாடுகளின் தலைவர்களும் ஒர்டேகாவுக்கு வாழ்த்துச் செய்திகளைப் பரிமாறி வரும் நிலையில் அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும் நிக்கரகுவா அதிகாரிகள் மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. ‘மனித உரிமைகளைக் காப்பதற்காக நிக்கரகுவா மக்களின் சார்பில் இந்தத் தடைகள் விதிக்கப்படுவதாக’ அவை காரணம் கூறியுள்ளன.

அமெரிக்கா அல்லது மேற்குலகம் தவிர்த்து வேறு எந்த நாடுகளும் உலகில் ஏனைய நாடுகள் மீது பொருளாதாரத் தடைகளை விதிப்பதில்லை. பொதுவில் பொருளாதாரத் தடைகள் மனித உரிமை மீறல்களாகவே கருதப்படுகின்றன. பொருளாதாரத் தடைகள் தொடர்பில் அண்மையில் ஐ.நா. வெளியிட்ட ஒரு ஆய்வறிக்கை கூட “பொருளாதாரத் தடைகளால் சாதாரண மக்களே அதிகம் பாதிக்கப்படுவதாக”க் கூறுகிறது, இருந்தும் தனது கொள்கைகளோடு ஒத்துப் போகாத எந்தவொரு அரசாங்கமாக இருப்பினும் அந்த அரசாங்கங்கள் மீதும், ஆளுகின்ற நபர்கள் மீதும், அதிகாரிகள் மீதும், சில வேளைகளில் குறிப்பிட்ட நிறுவனங்கள் மீதும் பொருளாதாரத் தடைகள் விதிப்பதை அமெரிக்கா வழக்கமாகக் கொண்டுள்ளது. அமெரிக்காவின் கொள்கைகளை உண்மையான ஜனநாயகம் எனக் கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்ளும் உலகின் ஒருசில நாடுகள் அவற்றுக்கு ஆதரவு நல்குவதும், சிலவேளைகளில் அவை தொடர்பில் பாராமுகமாக இருப்பதுவும் தொடர்கின்றன.

நிக்கரகுவா உட்பட தென் அமெரிக்கப் பிராந்தியம் முழுவதையும் தனது ஆளுகைக்குட்பட்ட பிரதேசம் எனக் கருதும் அமெரிக்க ஏகாதிபத்தியம், அங்கேயுள்ள நாடுகளில் தான் விரும்பிய நபர்களால் மாத்திரம், தான் விரும்பியவாறு ஆட்சி நடைபெற வேண்டும் என்பதில் குறியாக இருந்து வருகின்றது. அவர்கள் எத்தனை மோசமான ஆட்சியாளர்களாக இருந்தாலும் கூட அவர்களை ஆதரிக்கவும், பாதுகாக்கவும் தயாராக உள்ள அமெரிக்கா, தனக்கு விருப்பமில்லாத யாராயினும் அவர்களைக் கூண்டோடு அழித்துவிடத் துடியாகத் துடிக்கின்றது.

அமெரிக்கப் பிராந்தியத்தின் முதலாவது பொதுவுடமை நாடான கியூபாவின் புரட்சியாளரான பிடல் காஸ்ட்ரோவைக் கொல்வதற்கு அறுநூறுக்கு மேற்பட்ட தடவைகள் அமெரிக்கா முயற்சி செய்தமை உலகறிந்த விடயம். இன்றும் கூட தனக்குப் பிடிக்காத ஆட்சியாளர்களை அகற்றுவதற்கு அமெரிக்கா மேற்கொள்ளும் முயற்சிகள் அவ்வப்போது செய்திகளில் வெளிவரவே செய்கின்றன.

ஒர்டேகாவுக்கும் அமெரிக்காவுக்குமான பகைமை நீண்டது. அது 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து தொடர்கிறது. 1909 முதல் 1933 வரை அமெரிக்கா நிக்கரகுவாவை ஆக்கிரமித்திருந்தது. இக்காலப் பகுதியில் அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு எதிராகப் போராடியவரே அகுஸ்ரோ சீசர் சன்டினோ. அமெரிக்க வெளியேற்றத்தின் பின்னர் அப்போதைய அரசுத் தலைவராக விளங்கிய யுவான் பவ்ற்றிஸ்ரா சக்காசா, கெரில்லாத் தலைவரான சன்டினோவுடன் சமாதான உடன்படிக்கையொன்றைச் செய்து கொண்டார். எனினும் இராணுவத் தளபதியாக விளங்கிய அனஸ்ராசியோ சோமோசோ கார்சியா. சன்டினோவைக் கொல்வதற்கு முடிவு செய்திருந்தார்.

1934 பெப்ரவரி 21ஆம் திகதி அரசுத் தலைவர் மாளிகைக்கு விருந்துக்கு அழைக்கப்பட்ட அகுஸ்ரோ சீசர் சன்டினோ, விருந்து முடிந்து செல்லும் வழியில் படையினரால் வழிமறிக்கப்பட்டுக் கொல்லப்பட்டார்.
அன்றுமுதல் 1979இல் டானியல் ஒர்டேகா தலைமையிலான சட்டினிஸ்ரா விடுதலை முன்னணிப் போராளிகளால் பலவந்தமாக அகற்றப்படும் வரை சோமோசோ குடும்ப ஆட்சியே நிக்கரகுவாவில் நீடித்தது. எந்தப் போராட்டத் தலைவரை வஞ்சகமாகக் கொன்றனரோ, அதே போராட்டத் தலைவனின் பெயரில் ஒரு ஆயுதப் போராட்ட இயக்கத்தைக் கட்டமைத்து அதன் துணையுடன் விடுதலையைச் சாதித்தவரே ஒர்டேகா.

அவர் நினைத்திருந்தால் கியூபா போன்றதொரு ஆட்சிக் கட்டமைப்பை அந்த நாட்டில் உருவாக்கியிருக்க முடியும். எனினும் ஐனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட அவர் தேர்தல் அரசியல் மூலம் பதவிக்கு வந்தார். 1990ஆம் ஆண்டில் அரசுத் தலைவர் பதவியை இழந்த அவர் பலாத்கார வழியில் தனது பதவியைத் தக்கவைத்துக் கொள்ள முயற்சி செய்யவில்லை. எதிர்க்கட்சி வரிசையில் 17 வருடங்கள் அமர்ந்திருந்த அவர் 2007இல் மீண்டும் அரசுத் தலைவரானார். தொடர்ந்து நான்காவது முறையும் வெற்றிபெற்று இப்போது பதவியை ஏற்றுள்ளார்.

தனக்கு விருப்பமான ஒருவரை ஆட்சிக் கதிரையில் அமரவைக்க முடியவில்லை என்ற விடயம் ஒருபுறம் இருக்க, தொடர்ந்து தனக்கு விருப்பமில்லாத விடயங்கள் நிக்கரகுவாவில் நடப்பதை அமெரிக்காவால் சகித்துக்கொள்ள முடியவில்லை. தாய்வானுடனான தனது உறவை கடந்த டிசம்பரில் துண்டித்துக் கொண்ட நிக்கரகுவா சீனாவுடன் தனது உறவைப் புதுப்பித்துள்ளது. அது மாத்திரமன்றி சீனாவின் பட்டுப்பாதைத் திட்டத்தில் இணைந்துகொள்ளத் தயார் எனவும் அறிவித்துள்ளது. அது மாத்திரமன்றி, முன்னைய திட்டமான ‘நிக்கரகுவா கால்வாய்’ திட்டத்தை அமுல்படுத்தவதில் ஆர்வம் கொண்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

மத்திய அமெரிக்காவில் பசிபிக் மற்றும் அத்திலாந்திக் சமுத்திரங்களை இணைக்கும் பனாமா கால்வாய் உள்ளது. பல ஆயிரம் கிலோமீற்றர் தூர பயணநேரத்தை மீதப்படுத்தக் கூடிய இந்தக் கால்வாய் மறைமுகமாக அமெரிக்காவின் கட்டுப்பட்டிலேயே உள்ளது.

இதனால் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்காவுக்குப் பிடிக்காத நாடுகள் இந்தக் கால்வாயைப் பயன்படுத்துவதில் சிரமங்கள் உள்ளன. இந்நிலையில் நிக்கரகுவாவில் இதுபோன்ற ஒரு கால்வாயை 50 பில்லியன் டொலர் செலவில் நிர்மாணிக்க சீன நிறுவனம் ஒன்று தயாராக உள்ளது. 280 கிலோமீற்றர் நீளமான இந்தக் கால்வாய் அமையும் பட்சத்தில் 50 வருடங்களுக்கு இது சீன நிறுவனத்தின் பொறுப்பில் விடப்படும். அவ்வாறு ஒரு கால்வாய் அமையும் பட்சத்தில் தனது ஏகபோகம் இல்லாமல் போகும் என அஞ்சும் அமெரிக்கா சீனாவின் ஆதிக்கம் கட்டுப்படுத்த முடியாமல் அதிகரிக்கும் எனவும் கருதுகின்றது.

எனவே, இந்தத் திட்டம் தடைப்பட வேண்டுமாயின் ஒர்டேகா ஆட்சி அகற்றப்பட்டே ஆகவேண்டும் என அமெரிக்கா நினைக்கிறது. அதற்காக தனது சகல வளங்களையும் பாவிக்கத் தயாராக இருக்கிறது. 1980களில் ‘கொன்ராஸ்’ என்ற பெயரிலான கொலைக் குழுக்களுக்கு பணத்தையும், ஆயுதங்களையும் வழங்கி நிக்கரகுவாவில் அமெரிக்கா மேற்கொண்ட கொடூரங்கள் வரலாற்றின் கறைபடிந்த அத்தியாயங்கள். அன்றைய காலகட்டத்தில் சற்றொப்ப 30 இலட்சம் மக்கட்தொகையைக் கொண்டிருந்த அந்த நாட்டில் 30,000 மக்கள் இந்தக் குழுக்களால் கொல்லப்பட்டிருந்தனர். ஐ.நா. உட்பட உலக மன்றங்களில் இந்தச் செயற்பாடுகள் கண்டிக்கப்பட்டிருந்தாலும் அதற்காகவெல்லாம் அமெரிக்கா பின்வாங்காது என்பது தெரிந்த விடயமே.

ஆனால், புதிதாக ஆட்சிக்கு வந்தவர்களாக இருந்த போதும் சன்டினிஸ்ராக்கள் – ஒர்டேகா தலைமையில் – கியூபா, ரஸ்யா மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் துணையோடு கொன்ராஸ்களைத் தோற்கடித்து தமது புரட்சியைக் காப்பாற்றிக் கொண்டார்கள். மீண்டும் அத்தகையதொரு நிலை ஏற்படுமானால் அவர்கள் தங்களை மீண்டும் நிரூபித்துக் காட்டுவார்கள் என நம்பலாம். ஏனெனில், அவர்களிடம் இழப்பதற்கு உயிரைத் தவிர வெறெதுவும் இல்லை.

Leave A Reply

Your email address will not be published.