மாணவி லாவண்யாவை மதம் மாறச் சொல்லி கட்டாயப்படுத்தவில்லை – தஞ்சாவூர் எஸ்.பி விளக்கம்

அரியலூர் மாவட்டம் வடுகபாளையம் கீழத்தெருவை சேர்ந்தவர் முருகானந்தம் (47). இவரின் முதல் மனைவி கனிமொழியின் மகள் லாவண்யா (17). கனிமொழி 8 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் லாவண்யாவை மைக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலைபள்ளியில் 8ம் வகுப்பில் சேர்த்து இருந்தார். தற்போது 12ம் வகுப்பில் படித்து வந்தார். அருகில் உள்ள செயின்ட் மைக்கேல் மகளிர் விடுதியில் லாவண்யா தங்கியிருந்தார்.இந்நிலையில் கடந்த 9ம் தேதி லாவண்யா வாந்தி எடுத்துள்ளார்.

அப்போது அவர் தனக்கு வயிற்றுவலி என்று கூறியதால் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளித்துள்ளனர். பின்னர் மறுநாள் அவரது தந்தைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து முருகானந்தம் மைக்கேல்பட்டி வந்து தன் மகள் லாவண்யாவை அழைத்து சென்றுள்ளார். பின்னர் மாணவி லாவண்யாவுக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டதால் கடந்த 15ம் தேதி தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

அங்கு பரிசோதித்த டாக்டர்களிடம் மாணவி லாவண்யா, தான் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்ததாகவும், விடுதியில் தன்னை அனைத்து அறைகளையும் தூய்மை செய்ய வேண்டும் என்று வார்டன் கூறியதன் பேரில் ஏற்பட்ட மன உளைச்சலால் பூச்சி மருந்தை குடித்ததாகவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து டாக்டர்கள் திருக்காட்டுப்பள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து போலீசார் மாணவி லாவண்யாவிடம் வந்து விசாரித்தனர்.

இந்தநிலையில் மாணவி லாவண்யா உயிரிழந்தார். இந்த விவகாரம் தமிழ்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவி லாவண்யா மதம் மாறச் சொல்லி கட்டாயப்படுத்தியுள்ளனர் என்று பா.ஜ.கவினர் குற்றம்சாட்டிவருகின்றனர். இந்தநிலையில், இந்தவிவகாரம் தொடர்பாக தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர், ‘மதமாற்றம் செய்ய மாணவியை கட்டாயப்படுத்தவில்லை என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. முதல் முறையாக பெற்றோர்கள் கொடுத்த புகாரிலோ, நீதிபதியிடம் அளித்த வாக்குமூலத்திலோ, காவல்துறை விசாரணையின் போதும் மதமாற்றம் என்ற புகார்கள் வரவில்லை. நேற்றுதான் இதுபோன்ற தகவல் வெளியாகி உள்ளது. ஒருவர் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும்போது அவரை வீடியோ எடுப்பதும், ஒளிபரப்புவது, அவர்கள் பெயர் முகவரி இது தொடர்பாக உள்ளிட்டவை வெளியிடுவது சட்டப்படி குற்றம். இதுதொடர்பாக மருத்துவக் கல்லூரி காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்று பெற்றோர்கள் புதிதாக ஒரு புகார் கொடுத்துள்ளனர். அது குறித்து விசாரணை செய்து வருகிறோம்’ என்று தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.