தமிழ் கட்சிகள் இந்தியாவை நாடியமை சாதாரண விடயமாகக் கருத முடியாது அரசுக்கு சு.க. எச்சரிக்கை.

“அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தக் கோரியும், 1987ஆம் ஆண்டு வாக்குறுதிகளை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்தியும் தமிழ் அரசியல் கட்சிகள் ஒன்றாக இந்தியாவை நாடியமை சாதாரண விடயமாகக் கருத முடியாது.”

இவ்வாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் ரோஹண லக்ஸ்மன் பியதாஸ தெரிவித்தார்.

ஆகவே, தமிழர் தரப்பின் பிரச்சினைகளைச் செவிமடுத்து அவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்குத் தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க வேண்டிய கட்டாயம் இலங்கை அரசுக்கு உள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

நாட்டின் தற்போதைய அரசியல் முரண்பாடுகள் தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைமையில் தமிழர் தரப்பு இந்தியாவுடன் தனிப்பட்ட தொடர்புகளை ஏற்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்படுகின்றது.

அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தல் மற்றும் 1987ஆம் ஆண்டு வாக்குறுதிகளை முழுமையாக நடைமுறைப்படுத்த வலியுறுத்தியுள்ளமை வழமை போன்ற செயற்பாடாக இருந்தாலும் இப்போது இதனைச் சாதாரணமாகக் கருத முடியாது.

இன்று சீனா, ஜப்பான் ஒருபக்கம் பலமடைந்து வருகின்ற நிலையில் அமெரிக்க தலைமையில் இந்தியா ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளின் கூட்டணி உருவாக்கப்பட்டு வருகின்றது.

இந்தப் போட்டியில் இலங்கை சிக்கிக்கொண்டுள்ளது. இதில் தமிழர் தரப்பின் நகர்வுகள் அவதானிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

வெவ்வேறு நாடுகளுடன் நாம் பகுதி பகுதியாக இணைய நினைப்பது ஆரோக்கியமான விடயம் அல்ல.

நாடாக ஒரே கொள்கையில் பயணிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதற்காக முதலில் தேசிய மட்டத்தில் சகல தரப்பையும் ஒன்றிணைத்துப் பேச்சுகளை முன்னெடுக்க வேண்டும்.

தமிழர் தரப்பின் பிரச்சினைகளைச் செவிமடுத்து அவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்குத் தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க வேண்டும்.

இனியும் தவறான கொள்கையில் அரசு பயணித்தால் ஒட்டுமொத்த நாடுமே பாதாளத்தில் விழும்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.