ஆக்கி புரோ லீக் போட்டி: இந்திய மகளிர் அணி வெற்றி.

ஓமன் நாட்டில் ஆக்கி புரோ லீக் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில், இந்தியா மற்றும் சீன மகளிர் அணிகள் விளையாடின. இந்த போட்டியில், சவீதா தலைமையிலான இந்திய அணியில் குர்ஜித் கவுர் தொடக்கத்திலேயே சிறப்புடன் செயல்பட்டார்.

இந்திய அணிக்கு கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பினை சரியாக பயன்படுத்தி கொண்ட கவுர் அதனை கோலுக்கு திருப்பினார். இதனால், 3வது நிமிடத்திலேயே இந்தியா கோல் அடித்தது.

தொடர்ந்து இரண்டு அணிகளும் கோல் அடிக்கும் முனைப்பில் ஈடுபட்டன. எனினும், முதல் 15 நிமிடங்கள் வரையில் இதே நிலை நீடித்தது. தடுப்பு ஆட்டத்திலும் இந்தியா சிறப்புடன் விளையாடியது.

தொடர்ந்து முதல் அரை மணிநேரம் வேறு கோல் எதுவும் அடிக்கப்படாத நிலையில், சீன வீராங்கனை சுமின் வாங் 39வது நிமிடத்தில் அடித்த கோலால் 1-1 என போட்டி சமநிலையை எட்டியது.

4வது கால் பகுதியில் கிடைத்த முதல் பெனால்டி கார்னர் வாய்ப்பு கோலாக்கப்படவில்லை. எனினும், 2வது பெனால்டி கார்னர் வாய்ப்பினை சரியாக பயன்படுத்தி கொண்டு குர்ஜிக் கவுர் 47வது நிமிடத்தில் கோலாக்கினார். இதனால், 2-1 என்ற புள்ளி கணக்கில் இந்தியா முன்னிலை பெற்றது. இந்த போட்டியிலும் வெற்றி பெற்று இந்திய அணி புள்ளிகள் பட்டியலில் முன்னேறியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.