தொடரை வெல்ல இந்தியா முனைப்பு: பதிலடி கொடுக்குமா வெஸ்ட் இண்டீஸ்?

வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக இன்று நடைபெறும் 2வது ஒருநாள் போட்டியில் வென்று தொடரை கைப்பற்றும் முனைப்புடன் இந்தியா களமிறங்குகிறது.இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெ.இண்டீஸ் அணி முதலில் 3 ஆட்டங்களை கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.

மோடி ஸ்டேடியத்தில் நடக்கும் இந்த தொடரின் முதல் போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்று 1-0 என முன்னிலை பெற்றது.இந்நிலையில், 2வது போட்டி அகமதாபாத்தில் இன்று பிற்பகம் 1.30க்கு தொடங்குகிறது.ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி, 1000வது ஒருநாள் போட்டியில் வென்ற அதே உற்சாகத்துடன் களமிறங்குகிறது. முதல் ஆட்டத்தில் விளையாடாத ராகுல் முழு உடல்தகுதியுடன் களமிறங்கத் தயாராகி இருப்பதால் இஷன் கிஷணுக்கு ஒய்வளிக்கப்படலாம். தீபக் ஹூடா, சூரியகுமார் இருவரும் சிறப்பாக விளையாடி திறமையை நிரூபித்துள்ளதால் அவர்கள் இடம் உறுதியாகி உள்ளது.

வாஷிங்டன், சாஹல் சிராஜ், பிரசித் ஆகியோரும் சிறப்பாக பந்துவீசி பங்களித்துள்ளனர். அதனால் இந்திய அணியில் பெரிய மாற்றம் ஏதும் இருக்காது. இந்தப் போட்டியில் வென்றால் தொடரை கைப்பற்றலாம் என்பதால் இந்திய வீரர்கள் மிகுந்த முனைப்புடன் களமிறங்குகின்றனர். அதே சமயம், போலார்டு தலைமையிலான வெ.இண்டீஸ் அணியும் பதிலடி கொடுக்க வரிந்துகட்டுகிறது. தொடரை வெல்ல இந்தியாவும், வெற்றியை தொடங்க வெ.இண்டீசும் முனைப்பு காட்டுவதால் இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

இந்தியா: ரோகித் (கேப்டன்), கே.எல்.ராகுல் (துணை கேப்டன்), கோஹ்லி, சூரியகுமார், இஷான் கிஷன் (கீப்பர்), தீபக் ஹூடா, பன்ட் (கீப்பர்), தீபக் சாஹர், ஷர்துல் தாகூர், சாஹல், குல்தீப், சுந்தர், ரவி பிஷ்னோய், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஆவேஷ் கான்.
வெஸ்ட் இண்டீஸ்: போலார்டு (கேப்டன்), பேபியன் ஆலன், என்க்ருமா போனர், டேரன் பிராவோ, ஷமார் புரூக்ஸ், ஜேசன் ஹோல்டர், ஷாய் ஹோப், அகீல் உசேன், அல்ஜாரி ஜோசப், பிராண்டன் கிங், நிகோலஸ் பூரன், கெமார் ரோச், ரொமாரியோ ஷெப்பர்ட், ஓடியன் ஸ்மித், ஹேடன் வால்ஷ் ஜூனியர்.

Leave A Reply

Your email address will not be published.