சர்வதேச சக்திகளுடன் இணைந்து அரசைக் கவிழ்ப்பதற்குச் சதி முயற்சி.

“மஹிந்த ராஜபக்ச அரசைக் கவிழ்ப்பதற்கு அன்று செயற்பட்டது போன்றே, தேசிய மற்றும் சர்வதேச சக்திகளுடன் இணைந்து தற்போதைய அரசின் பயணத்தைத் தடுப்பதற்கான சதி முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.”

– இவ்வாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச குற்றஞ்சாட்டினார்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுப் பேரணிகளின் ‘முதலாவது பொதுஜன பேரணி’ நிகழ்வு இன்று அநுராதபுரத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“பொதுமக்களைத் தவறாக வழிநடத்தி இந்த நாட்டைப் பாதாளத்துக்குள் தள்ளிவிட கடந்த காலத்தில் ஆட்சியிலிருந்த சில குழுக்கள் மீண்டும் இணைந்து செயற்படுகின்றன.

அரசின் கொள்கைத் திட்டங்கள், எதிர்காலச் சந்ததியினரின் நலனை இலக்கு வைத்தே முன்னெடுக்கப்படுகின்றன. அதனால், எவ்வாறான தடைகள் ஏற்படினும் தொடர்ந்து முன்னோக்கி நகர்வோம்.

அரசுக்கு எதிராக வீதிக்கு இறங்கிப் போராட்டங்களை நடத்துபவர்கள், பொதுமக்கள் தொடர்பில் சிந்திக்க வேண்டும். அரச ஊழியர்கள், நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் அர்ப்பணிப்புடன் சேவையாற்ற வேண்டும்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.