ஐ.நா. தீர்மானங்களால் நல்லிணக்கம் ஏற்படாது! – இப்படிக் கூறுகின்றது அரசு.

“ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களால் நல்லிணக்கம் ஏற்படாது. இலங்கை வெளிப்படை தன்மையுடன் செயற்படுகின்றது. உள்ளகப் பொறிமுறையில் முன்னேற்றம் கண்டுள்ளது. எனவே, சர்வசேத்திடம் இருந்து நட்பு ரீதியான அணுகுமுறையையே எதிர்ப்பார்க்கின்றது.”

இவ்வாறு வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-

“ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் 49 ஆவது கூட்டத்தொடர் பெப்ரவரி 27 ஆம் திகதி ஆரம்பமாகின்றது. இதன்போது இலங்கை தொடர்பான எழுத்துமூல அறிக்கை, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாரால் முன்வைக்கப்படும்.

அந்த அறிக்கை மார்ச் 03 ஆம் திகதி விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும். மேற்படி எழுத்துமூல அறிக்கை தொடர்பில் பெப்ரவரி 19 ஆம் திகதிக்கு முன்னர் எமது நிலைப்பாடு ஜெனிவாவுக்கு அனுப்படும். நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையின் அடிப்படையிலேயே நாம் ஜெனிவாத் தொடரில் பங்கேற்கின்றோம்.

உலகில் இன்று பல பிரச்சினைகள் உக்கிரமடைந்துள்ளன. அவை இன்று வெடிக்கும் கட்டத்துக்கு வந்துவிட்டன. இப்படி உலகில் பல பிரச்சினைகள் இருக்கும்போது, இலங்கை மட்டும் இலக்கு வைக்கப்படுவது ஏன்? இது நியாயமா? உலக அமைதிக்கு இலங்கையால் எந்தவொரு பிரச்சினையும் ஏற்படுவதில்லை.

நல்லிணக்கம் தொடர்பில் கவனம் செலுத்தப்படும். இது உணர்வுப்பூர்வமான விடயமாகும். இப்பிரச்சினைக்கு ஒரே இரவில் தீர்வை கண்டுவிடமுடியாது. நீடித்து நிலைக்கக்கூடிய நிலையானதொரு தீர்வை நாம் எதிர்ப்பார்க்கின்றோமெனில், அதற்கான பொறிமுறை நாட்டின் கலாச்சாரம் மற்றும் நாட்டு மக்களின் அபிலாஷைகளுக்கமையவே தயாரிக்கப்பட வேண்டும். இது தொடர்பில் எமது நாட்டில் பரந்தப்பட்ட விடயங்கள் இடம்பெற்றுள்ளன. இதனை சர்வதேசகம் ஏற்க வேண்டும். பக்கச்சார்பின்றி இலங்கை தொடர்பில் பார்வையைச் செலுத்த வேண்டும்.

மனித உரிமை விவகாரம் தொடர்பில் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிப்பதற்காக உயர் நீதிமன்ற நீதியரசர் நவாஸ் தலைமையில் குழுவொன்று அமைக்கப்பட்டது. அந்த குழுவின் அறிக்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் இன்னும் ஒரு வாரத்தில் கையளிக்கப்படவுள்ளது. கடந்த காலங்களில் நியமிக்கப்பட்ட குழுக்கள் தொடர்பிலும் ஆராய்வது இக்குழுவின் பணியாக இருந்தது. மேற்படி குழு யாழ்ப்பாணத்துக்கும் சென்றது. சாட்சியங்களைத் திரட்டியது.

காணாமல்போனோர் அலுவலகம், இழப்பீட்டு பணிகள், நல்லிணக்க செயலணி, மனித உரிமைகள் ஆணைக்குழு என பல உள்ளக பொறிமுறைகள் உள்ளன. இவற்றின்மூலம் பலனும் கிடைத்துள்ளன. இவை தொடர்பில் கொழும்பிலுள்ள வெளிநாட்டு தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களுக்கு தெளிவுபடுத்தியுள்ளோம். ஜெனிவாவிலுள்ள தூதுவர்களுக்கும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

வெளிப்படை தன்மையுடன் இலங்கை செயற்படுகின்றது. எமது நாட்டுக்கு வாருங்கள். வந்து அது தொடர்பில் விசாரணை நடத்துங்கள். அதற்கான வாய்ப்பை வழங்கியுள்ளோம். உலகில் எந்தவொரு நாட்டுக்கும் பிரச்சினை இல்லாத இலங்கை மட்டும் இலக்கு வைக்கப்படுவது ஏன்? உலகில் 50 வீதமான மக்களுக்கு தடுப்பூசிகள் இல்லை. அவ்வாறானதொரு நிலையில் பல மில்லியன்களை இலங்கையை இலக்கு வைத்து செலவிடுவது ஏன்? ஜெனிவாவில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களால் நல்லிணக்கம் ஏற்படப்போவதில்லை. சர்வதேசத்துடன் இணைந்து செயற்பட நாம் தயார். நட்பு ரீதியான அணுகுமுறையே வேண்டும். இதனை இம்முறை மாநாட்டில் அறிவிப்போம்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.