நாட்டைக் கட்டியெழுப்ப ஒன்றிணையுங்கள்! தொழில்முனைவோருடன் நடந்த ஆக்கபூர்வமான சந்திப்பு…

எமது நாட்டின் தொழிற்றுறைகளில் முதலீடுகளைச் செய்து, எமது நாட்டைக் கட்டியெழுப்ப ஒன்றிணையுமாறு, எமது நாட்டின் தொழில்முனைவோருக்கு நான் நேற்று அழைப்பு விடுத்தேன். பல்வேறு துறைகளைச் சேர்ந்த தொழில்முனைவோருடன் நேற்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே, நான் இந்த அழைப்பினை விடுத்தேன்.

அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்குத் தனியார்த் துறையினரின் பங்களிப்பைப் பெற்றுக்கொள்ளும் நோக்கத்தில் இந்தக் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்நியச் செலாவணியை உருவாக்குதல், அரச நிதிக் கொள்கை, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மேம்பாடு, முதலீடுகளை ஊக்குவித்தல், ஏற்றுமதியை மேம்படுத்தல், மீள்புதுப்பிக்கத்தக்க சக்திவலு, விவசாய உற்பத்திகள், போதுமானளவு பசளை விநியோகம், சுற்றுலாத்துறை அபிவிருத்தி உள்ளிட்ட பல துறைகள் தொடர்பிலான கலந்துரையாடல்கள் இன்று இடம்பெற்றன.
“மீள்புதுப்பிக்கத்தக்க சக்திவலு, பசுமை விவசாயம், தொழில்நுட்பப் பூங்காக்கள், பசுமை இல்லங்கள் உள்ளிட்ட பல துறைகளுக்கான பாரியளவு முதலீட்டுடன் – அந்நியச் செலாவணியை நிர்வகிக்கும் பாரிய சந்தர்ப்பம் ஒன்று கிட்டும்” என்ற எனது நம்பிக்கையை நான் இன்று அவர்களிடம் வெளிப்படுத்தினேன்.

எமது நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு உள்நாட்டுத் தொழில்முனைவோர் தொடர்ந்து வழங்கிவரும் ஒத்துழைப்புகளுக்காக அவர்களுக்கு எனது பாராட்டுகளை நான் தெரிவித்ததுடன்,
“உலகளாவிய தொற்றுப் பரவல் நிலைமைக்கு முகங்கொடுத்துக்கொண்டே பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப எமது அரசாங்கம் முயற்சித்து வரும் நிலையில், பலர் தமது குறுகிய நோக்கங்களை அடைவதற்காக முன்னெடுத்து வரும் தவறான பிரச்சாரங்களை, வர்த்தகச் சமூகத்தினரால் மாத்திரமே முறியடிக்க முடியும்” என்பதையும் நான் தெளிவுபடுத்தினேன்.

“கடந்த இரண்டு வருட காலப்பகுதியில் நிர்மாணத் துறையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக, சீமெந்துக்கான தேவை அதிகரித்துள்ளது. இதனால் சீமெந்துக்குப் பற்றாக்குறை நிலவியது” என்பதனைத் தெரிவித்த அமைச்சர் பசில் ராஜபக்க்ஷ அவர்கள், “எதிர்காலத்தில் நாட்டுக்கு உள்ளேயே சீமெந்து உற்பத்தியை முழுமையாக மேற்கொள்வதற்கு அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது” என்பதனையும் குறிப்பிட்டார்.

“அத்தியாவசியப் பொருட்களுக்கான தட்டுப்பாடுகள் எவையும் சந்தையில் காணப்படவில்லை” என்று எடுத்துரைத்த அமைச்சர், “மருந்துப்பொருட்கள் தவிர்ந்த பல பொருட்களுக்கான நிர்ணய விலையை நீக்குவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தைக் கொண்டு தேவையற்ற பயன்களை அடைய முயற்சிக்க வேண்டாம்” என்ற கோரிக்கையை வர்த்தக சமூகத்தினர் முன்னால் வைத்தார்.
“கையிருப்புக்கு ஏற்ப தேவையான எரிபொருள் கொள்வனவை மேற்கொள்வது எமக்குச் சவாலாக இருப்பினும், அபிவிருத்திக்கும் தொழிற்றுறைகளுக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் எரிபொருள் கையிருப்பைப் பேணுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது” என்பதனை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கெப்ரால் அவர்கள் தெரிவித்தார்.

“நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் போலிப் பிரசாரங்கள் காரணமாக, வெளிநாட்டு முதலீட்டு வாய்ப்புகள் இல்லாமல் போகின்றன” என்பதனைச் சுட்டிக்காட்டிய மத்திய வங்கியின் ஆளுநர், “அனைத்து வெளிநாட்டுக் கடன்களையும் செலுத்த அரசாங்கத்தால் முடியும்” என்றும், “கடனல்லாத வெளிநாட்டு முதலீடுகளை நாட்டுக்குப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது” என்பதனையும் குறிப்பிட்டார்.

எமது அரசாங்கத்தின் கொவிட் தொற்றொழிப்பு வேலைத்திட்டத்துக்குத் தமது பாராட்டுகளைத் தெரிவித்த தொழில்முனைவோர், அந்த வெற்றி காரணமாகத்தான் தமது வர்த்தகங்களைப் பாதுகாத்துக்கொள்ள முடிந்தது என்றும் தெரிவித்தனர்.
பல்வேறு நாடுகளால் கொவிட் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த முடியாமல் போனதால், அந்த நாடுகள் பலவற்றுக்குக் கிடைக்கவிருந்த பல பொருளாதார வாய்ப்புகள் இலங்கைக்குக் கிடைத்துள்ளன என்பதனை அவர்கள் மேலும் குறிப்பிட்டனர்.
கொரோனா தொற்றுப் பரவல் காலத்தில், எமது சுற்றுலாத்துறையில் பாரிய வளர்ச்சி ஏற்பட்டுள்ளதைக் காணக் கிடைக்கின்றது. அதன் அபிவிருத்திக்காக, சுற்றுலாப் பயணிகளுக்கான வசதி வாய்ப்புகளை அதிகரிக்க வேண்டியதன் தேவை தொடர்பிலும் தொழில்முனைவோர் நேற்று எடுத்துரைத்தனர்.

உயர்க்கல்விக்காக மாணவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதை முற்றாக நிறுத்தி, நாட்டுக்குள்ளேயே அந்தக் கல்வி வாய்ப்புகளை ஏற்படுத்துவதற்கான பொறிமுறை ஒன்றைத் தயாரிக்குமாறு தொழில்முனைவோர்கள் என்னிடம் கோரிக்கை ஒன்றை விடுத்தனர்.
எனது செயலாளர் காமினி செனரத், எனது தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, நிதியமைச்சின் செயலாளர் எஸ். ஆர். ஆட்டிகல ஆகியோர் உள்ளிட்ட அதிகாரிகளும் பல்வேறு துறைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழில்முனைவோர் பலரும் நேற்றைய கலந்துரையாடலில் கலந்துகொண்டிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.