ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளருக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் கடிதம்.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மற்றும் உறுப்பு நாடுகளின் தலைமைப் பிரதிநிதிகளுக்கு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளது.

இலங்கை தொடர்பான விசாரணைகளை இனியும் தாமதப்படுத்தாமல் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திடம் ஒப்படைப்பதற்காக ஐ.நா. பொதுச்சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கடிதத்தில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்ற, அத்துமீறல்கள் தொடர்பில் அறிக்கையிடுவதற்காக ஐ.நாவின் விசேட அறிக்கையாளர் ஒருவரை நியமிப்பதற்கான தீர்மானமும் நிறைவேற்றப்பட வேண்டும் என அந்தக் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் 13 ஆவது அரசமைப்பு திருத்தத்தை ஆரம்பப் புள்ளியாகக் கூட கருத முடியாது எனத் தெரிவித்துள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, 13 ஆவது திருத்தச் சட்டத்துக்கு எதிராகக் கடந்த ஜனவரி மாதம் 30ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்ட மக்கள் பேரணியையும் கடிதத்தில் நினைவுகூர்ந்துள்ளது.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இடம்பெறுகின்ற காணி அபகரிப்பு, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்கவேண்டியதன் அவசியம் உள்ளிட்ட மேலும் பல விடயங்களையும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் உள்ளிட்ட உறுப்பு நாடுகளின் கவனத்துக்குக் கொண்டுவந்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.