யுக்ரேன் – ரஷ்யா இடையே மோதல் நடப்பது ஏன்? எளிய விளக்கம்.

யுக்ரேனி பிரதேசத்துக்குள் நுழைந்து கிட்டத்தட்ட ஒரு வாரமாக ரஷ்யா படையெடுப்பை மேற்கொண்டு வருகிறது. அந்த நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏற்கெனவே வான் மற்றும் தரை வழியாக ரஷ்ய ராணுவத்தினர் நுழைந்து தலைநகர் கியவ், கார்கிவ் போன்ற பகுதிகளில் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளனர்.

நேற்று தலைநகர் கீயவில் தாக்குதல் நடத்திய ராணுவத்தினர் இன்று ரஷ்ய எல்லையில் இருந்து சில கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கார்கிவ் நகரில் ராணுவ தாக்குதலை கடுமையாக்கியுள்ளனர். பல அரசு கட்டட்ங்கள், ராணுவம் மற்றும் பாதுகாப்புத்துறை தொடர்புடைய கட்டடங்கள் இலக்கு வைக்கப்பட்டுள்ளன.

அங்கிருந்து லட்சக்கணக்கான மக்கள் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த குடிமக்கள் அண்டை நாடுகளுக்கு சாலை வழியாக தப்பி வெளியேறி வருகின்றனர்.

ஆனால், சில வாரங்களுக்கு முன்பு டோன்பாஸ் பிராந்தியத்தில் ராணுவ நடவடிக்கையைத் தொடங்க ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் உத்தரவிட்டபோது, ரஷ்ய மக்களுக்கு தொலைக்காட்சியில் உரையாற்றிய ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின், யுக்ரேனை “ஆக்கிரமிக்கும் திட்டங்கள் எதுவும் இல்லை,” என்று கூறினார். ஆனால், களத்தில் நடக்கும் காட்சிகள் அவரது பேச்சுக்கும் செயலுக்கும் முரண்படுவதாக உள்ளன.

இத்தகைய சூழலில், யுக்ரேனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே மோதல் ஏற்படுவதற்கான காரணம் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

பிரச்னை என்ன?
1990கள் வரை யுக்ரேன் சோவியத் ஒன்றியத்தின் ஓர் உறுப்பு நாடாகத்தான் இருந்தது. அதற்குப் பின் சோவியத் சிதைந்தபோது, சுதந்திரம் பெற்று தனி நாடாக தங்களுக்கென புதிய அரசமைப்புச் சட்டத்தோடு செயல்பட்டு வருகிறது.

இப்போதும் யுக்ரேன் தன் எல்லைகளை ரஷ்யாவோடும், ஐரோப்பிய ஒன்றியத்தோடும் பகிர்ந்து கொள்கிறது. ஆனால் கலாசார ரீதியிலும் சமூக ரீதியிலும் ரஷ்யாவோடு பல தொடர்புகளைக் கொண்டுள்ளது உக்ரைன். இப்போதும் ரஷ்ய மொழி பேசுவோர் கணிசமாக உக்ரைனில் வாழ்ந்து வருகின்றனர்.

2014ஆம் ஆண்டு ரஷ்யாவுக்கு ஆதரவாக இருந்த அதிபர் விக்டர் யனுகொவிச் (Viktor Yanukovych) பதவியிலிருந்து நீக்கப்பட்டார். அதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில், யுக்ரேனின் தெற்குப் பகுதியில் உள்ள கிரீமிய தீபகற்பத்தைக் கைப்பற்றியது ரஷ்யா. மேலும் கிழக்கு யுக்ரேனில் கணிசமான பகுதிகளைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பிரிவினைவாதிகளுக்கு ஆதரவளித்தது ரஷ்யா. இது தான் ரசோ – யுக்ரேனியன் (Russo-Ukrainian) போராக உருவெடுத்தது.

பிரிவினைவாதப் போராளிகளுக்கும் உக்ரைன் ராணுவத்துக்கும் இடையிலான போரில் இதுவரை 14,000த்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இப்போதும் போர் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.

மின்ஸ்க் ஒப்பந்தம்

2015ஆம் ஆண்டு உக்ரைனின் அப்போதைய அதிபர் பெட்ரோ பொரொஷென்கோ – ரஷ்யாவின் விளாதிமிர் புதின் இடையில் ஓர் ஒப்பந்தம் கையெழுத்தானது. அது தான் மின்ஸ்க் ஒப்பந்தம் என்றழைக்கப்படுகிறது. யுக்ரேன் மற்றும் ரஷ்ய ஆதரவோடு கிழக்கு யுக்ரேனில் இருக்கும் பிரிவினைவாதப் படைகளுக்கு இடையிலான பிரச்னையைத் தீர்ப்பது இந்த ஒப்பந்தத்தின் நோக்கம்.

அதன் பிறகு 20க்கும் மேற்பட்ட முறை போர் நிறுத்தத்தைக் கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன, ஆனால் அனைத்து முயற்சிகளும் பயனற்றுப் போயின. தொடர்ந்து எல்லையில் இரு தரப்பு படையினரும் கொல்லப்பட்டு வருகின்றனர்.

தேர்தல் பிரச்னை
ரஷ்யா, யுக்ரேன் இருநாடுகளுமே கிழக்கு உக்ரைன் பிரதேசத்தைக் குறித்து தங்களுக்கென தனித்தனிப் பார்வையைக் கொண்டுள்ளன. அது ஒன்றோடொன்று ஒத்துப் போகாமல் இருக்கிறது என்கிறார் சதம் ஹவுஸ் அசோசியேட் ஃபெல்லோவான டன்கன் ஆலன்.

யுக்ரேன் தன் நிலப்பரப்புகளை மீண்டும் தன் நாட்டோடு இணைக்கவும், தன் இறையாண்மையை நிலைநிறுத்தவும் விரும்புகிறது, ஆனால் ரஷ்யாவோ, கிவ் (Kyiv) நகரத்தில் உள்ள அதிகாரிகளைக் கட்டாயப்படுத்தி கிழக்கு யுக்ரேன் பகுதிக்கு சிறப்பு அந்தஸ்து அல்லது தன்னாட்சி அதிகாரத்தைப் பெற முயல்வதாக டன்கன் ஆலன் கருதுகிறார்.

யுக்ரேன் உள்நாட்டுத் தேர்தலை நடத்தவில்லை என்றும், கிழக்கு உக்ரைனுக்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்காமல் அலைக்கழிப்பதாகவும் ரஷ்யா குற்றம்சாட்டியுள்ளது.

ஆனால் யுக்ரேன் அரசாங்கமோ, கிழக்கு யுக்ரேனுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி விட்டதாகக் கூறுகிறது.

மின்ஸ்க் ஒப்பந்தத்தின் படி, உக்ரைன் தன் நிலப்பரப்புகளை ரஷ்யாவிடமிருந்து முழுமையாக பெறுவதற்கு முன், உள்நாட்டில் தேர்தலை நடத்த வேண்டும்.

கிழக்கு யுக்ரேனில் தேர்தல்களை நடத்த வேண்டும் என்றால், அப்பகுதி முதலில் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வர வேண்டும் என வலியுறுத்துகிறது உக்ரைன். இல்லை எனில் தேர்தல் ரஷ்யாவின் அழுத்தத்தின் கீழ் நடைபெறும் என உக்ரைன் தரப்பு கூறுகிறது.

உள்ளூர் அளவிலான தேர்தல்களை நடத்தாமல் யுக்ரேன், கிழக்கு யுக்ரேன் பகுதிகளைப் பெற அனுமதிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ரஷ்யா கடுமையாக எச்சரித்தது.

யுக்ரேனின் இறையாண்மையைக் கட்டுப்படுத்த நேட்டோ அமைப்பில் யுக்ரேன் இணையக் கூடாது என தமது பழைய வாதத்தை தற்போதைய சம்பவங்களின் தொடர்ச்சியாக மீண்டும் புதுப்பித்து வலியுறுத்தி வருகிறது ரஷ்யா. மேலும் நேட்டோ அமைப்பு கிழக்கு நோக்கி முன்னேறுவதை நிறுத்துவது தொடர்பாக முறையாக உறுதியளிக்க வேண்டும் என்றும் ரஷ்யா கோருகிறது.

மேற்கு நாடுகளின் போக்குகள் தொடர்ந்தால் ராணுவ ரீதியில் தக்க பதிலடி கொடுக்கப்படும் என சில மாதங்களுக்கு முன்பு புதின் எச்சரித்திருந்தார். அந்த எச்சரிக்கை இப்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.