‘இந்தியாவிற்கு வாருங்கள்’.. அமெரிக்க நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்த மத்திய அமைச்சர்!

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகன உற்பத்திக்கான உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் விதமாக, அமெரிக்காவின் எலெக்ட்ரிக் வாகன சார்ஜிங் தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய முன் வர வேண்டுமென மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி வலியுறுத்தியுள்ளார்.

இந்தியாவில் கடந்த ஆண்டு முதலே எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி மற்றும் பயன்பாட்டை அதிகரிக்க மத்திய அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குபவர்களுக்கு மானியம் போன்ற சலுகைகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியை அதிகரிக்கும் நோக்குடன் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அமெரிக்க நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

‘இந்தியா 2.0’ தொடரின் மறுவடிவமைப்பான ‘இந்தியாவின் உள்கட்டமைப்பை மீண்டும் கட்டமைத்தல்’ திட்டத்தின் கீழ் நடைபெற்ற கூட்டத்தில், “ரீமேஜினிங் இந்தியா 2.0” என்ற தலைப்பில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், மலை மற்றும் நெரிசலான நகர்ப்புறங்களில் மாற்று போக்குவரத்து வசதிக்காக ரோப்வேகனை மேம்படுத்த திட்டமிட்டு வருவதாக தெரிவித்தார்.

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட எலெக்ட்ரிக் வாகன சார்ஜிங் தொழில்நுட்ப நிறுவனங்கள், இந்தியாவின் தொழில்நுட்பம் மற்றும் தொழில் தொடர்பான மறுசீரமைப்பு திட்டத்திற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

மத்திய அரசு சூரிய சக்தி மற்றும் மின்சாரம் மூலம் இயங்க கூடிய சிறந்த சார்ஜிங் பொறிமுறையை கொண்ட நிறுவனங்களை வலுவாக ஊக்குவிக்கும் என்றும், எலெக்ட்ரிக் வாகன பேட்டரிகளுக்கான எரிபொருள் மாற்று சக்திக்கான கொள்கை மற்றும் தரநிலைகளை நிர்ணயிப்பது தொடர்பாக செயல்பட்டு வருவதாகவும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.

இதுகுறித்து நிதின்கட்கரி கூறுகையில் “இரு நாடுகளிலும் இளம் மற்றும் திறமையான பொறியியலாளர்கள் மிகவும் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பணிபுரிகின்றனர். கட்டுமானம், மாற்று சக்தி மற்றும் விவசாயம் தொடர்பான நடைமுறைகளில் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தின் பலனை உணர அமெரிக்க நிறுவனங்கள் முன்வந்து கூட்டு முயற்சியை உருவாக்கும் என நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.

அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவில் வந்து முதலீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ள நிதின் கட்கரி “உங்களைப் போன்ற தொழில்நுட்ப வல்லுநர்கள் இந்தியாவிற்கான சிறந்த அமைப்பை உருவாக்குவதற்கான இயக்கத்தில் பங்கேற்கலாம்” என அழைப்பு விடுத்துள்ளார்.

இந்தியா தனது சாலைத் துறையை மேம்படுத்த 100 சதவீத அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதையும், பிற நாடுகளின் கூட்டு முயற்சிகளுக்கு பெரும் வாய்ப்புகள் இருப்பதையும் சுட்டிக்காட்டினார்.

தற்போது, ​​தைவானைச் சேர்ந்த கோகோரோ, இந்திய மின்சார இரு சக்கர வாகன உற்பத்தியாளர்களான ஹீரோ மோட்டோகார்ப் மற்றும் ஏதர் எனர்ஜியுடன் போன்ற நிறுவனங்களுடன் இணைந்துள்ளது பற்றி எடுத்துரைத்தார்.

இந்தியாவில் தற்போது ஒகினாவா ஆட்டோடெக், சிம்பிள் எனர்ஜி, பவுன்ஸ் போன்ற எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பாளர்கள் மின்சார இரு சக்கர வாகனங்களை உற்பத்தி செய்வதையும், அவை மாற்றக்கூடிய பேட்டரி தொழில்நுட்பத்துடன் வருவதையும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி சுட்டிக்காட்டினார்.

Leave A Reply

Your email address will not be published.