கோவையை குறிவைத்து பணம் பறிக்கும் சைபர் கிரைம் கொள்ளையர்கள்.. 8 நாட்களில் ரூ.1 கோடி வரை திருட்டு..

சமீபமாக சைபர் கிரைம் கொள்ளையர்கள் கோவையை குறிவைத்து பணம் பறிப்பதால் பாதிக்கப்பட்டவர்கள் சைபர் கிரைம் காவல் நிலையங்களை தேடி குவிந்து வருகின்றனர்.

தொழில் நகரமான கோவையில் குண்டூசி தயாரிப்பு முதல் விமானத்திற்கு பயன்படும் எந்திரங்கள் வரை தயாரிக்கப்படுகிறது. அதேபோல இங்கு கல்லூரிகள், ஐ.டி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளின் செயல்பாடுகள் அதிக அளவில் உள்ளன. சமீபமாக இப்படி பெருநகரமாக தொடர்ந்து வளர்ந்து வரும் கோவை நகரை குறிவைத்து ஆன்லைன் கொள்ளையர்கள் தீவிரமாக வேட்டையாடி வருகின்றனர்.

செல்போனை பயன்படுத்தும் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரையும் பாரபட்சம் பார்க்காமல் பலி ஆடாக்கும் இந்த கொள்ளையர்கள், கடந்த 8 நாட்களில் கோவையைச் சேர்ந்த பல்வேறு தரப்பட்ட நபர்களிடமிருந்து ஒரு கோடி ரூபாய் வரை கொள்ளையடித்துள்ளதாக புகார் பதிவாகியுள்ளது.

இதுகுறித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு பாதிக்கப்பட்ட அந்தோணி என்பவர் கூறும்பொழுது, நான் தேசிய வங்கி ஒன்றில் பணம் டெபாசிட் செய்ய விசாரித்து இருந்தேன். இதைத்தொடர்ந்து எதேர்ச்சியாக எனது செல்போன் எண்ணிற்கு எனது பான் கார்டை அப்டேட் செய்ய, அனுப்பியுள்ள லிங்கை கிளிக் செய்யும்படி மெசேஜ் இருந்தது.

இதையடுத்து நான் பணி சுமையால் ஏற்பட்ட தூக்க கலக்கத்தில் மெசேஜை கிளிக் செய்த போது பெயர், பிறந்த தேதி, பேன் நம்பர் என 3 ப்ராசஸ் இருந்தது. ஒவ்வொன்றுக்குமான ஓடிபி எண்ணை அனுப்பினேன்.

அப்போது மூன்றாவது தடவை ஒரு லட்ச ரூபாய் என் கணக்கில் இருந்து எடுக்கப்பட்டது. பின்னர் அடுத்தடுத்து என மொத்தம் 2 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் திருடப்பட்டது.

எனது சூழலால் பணத்தை இழந்து விட்டேன். அதேபோல லிங்கை கிளிக் செய்தவுடன் வரும் இணையதள பக்கமும் ஒரிஜினலாக இருப்பதால் ஏமாந்து விட்டேன். சமீபமாக நான் புகார் அளிக்க சென்றபோது அதிகபட்சமாக வங்கி ஊழியர்கள் தான் அதிக அளவில் புகார் தெரிவிக்க வருகின்றனர். பொதுமக்கள் தூக்க கலக்கத்தில் இருக்கும்பொழுது பணம் சார்ந்த விவகாரங்களை பரிமாற வேண்டாம் இதில் எச்சரிக்கையாக இருங்கள் என தெரிவித்தார்.

கோவை மாநகரில் உள்ள காவல் நிலையத்தில் மட்டுமல்லாமல் சமீபமாக கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்திலும் சைபர் கிரைம் வழக்குகள் அதிகரித்து வருகிறது. இப்படி சைபர் கிரைம் போலீசார் சைபர் கிரைம் வழக்குகள் என்று பொதுவாக விசாரிப்பதால் கால தாமதங்கள் ஏற்படுகிறது. ஆகவே, சைபர் கிரைமிலிருந்து ஆன்லைன் பண மோசடியை மட்டும் விசாரிக்க தனிப் பிரிவை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இது குறித்து சைபர் கிரைம் வழக்கறிஞர் கலையரசன் கூறும்போது, ஆன்லைன் பண பரிவர்த்தனைகள் அதிகரித்துவிட்டதால் அதை சார்ந்த மோசடிகளும் அதிகரித்துவிட்டன. ஆன்லைனில் கொள்ளையடிப்பதற்கு என்றே பெரிய குழுவே செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. இவர்கள் அதிகமாக பொதுமக்களுக்கு பண ஆசையை தூண்டி அவர்களிடம் இருந்து பணத்தை பறிக்கின்றனர்.

போலி எண்கள், போலி வெப்சைட்கள், போலி இ-மெயில் ஐடிகளால் பொது மக்களை அணுகி பணத்தை களவாடுவதால் வழக்குகள் அதிகரிக்கிறது. காவல் துறைக்கும் இது சவாலாக உள்ளது. ஆகவே இவ்வழக்குகளை விசாரிக்கும் சைபர் கிரைம் போலீசாருக்கு வேறு பணிகளும் இருப்பதால் இந்த ஆன்லைன் மோசடிகளை பிரத்தியேகமாக பார்க்க முடிவதில்லை. ஆகவே தமிழக அரசு ஆன்லைன் மோசடிகளை விசாரிக்க தனிப் பிரிவை ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.

இப்படி கோவை மாநகரை குறிவைத்து சமீபமாக ஆன்லைன் கொள்ளையர்கள் தீவிரம் காட்டி வருவதால் அதைத் தடுக்க அதிக விழிப்புணர்வு ஏற்படுத்துவது காவல்துறைக்கு மட்டுமல்லாமல் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் விவரமறிந்தவர்கள் அனைவரின் கடமையாக உள்ளது.

இதுகுறித்து கோவை மாநகர சைபர் கிரைம் காவல் நிலைய ஆய்வாளர் தண்டபாணி கூறும்போது, கோவை மாநகரில் 15 வயதிற்கு மேற்பட்ட சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை இந்த சைபர் கிரைம் குற்றவாளிகளால் பாதிக்கப்படுகின்றனர்.

அதேபோல படித்தவர்கள் படிக்காதவர்கள் என எந்த பாரபட்சமும் இன்றி பாதிப்புக்குள்ளாகின்றனர். கடந்த 8 நாட்களில் மட்டும் ஒரு கோடி ரூபாய் வரை பொதுமக்கள் ஆன்லைன் கொள்ளையர்களால் மோசடிக்கு உள்ளாகியுள்ளனர்.

மேலும் செல்போனில் அனுப்பப்படும் லிங்கை பயன்படுத்தி கொள்ளையர்களிடம் சிக்கி பணத்தை இழக்கும் பொதுமக்கள் உடனடியாக இலவச எண்ணான 1930 என்ற எண்ணுக்கு அழைத்து தங்களின் கணக்கில் உள்ள மீதிப் பணத்தை பத்திரப்படுத்திக் கொள்ளலாம்.

மேலும் கோவையை குறிவைத்து செயல்படும் ஆன்லைன் கொள்ளையர்களிடம் இருந்து பொதுமக்களைப் பாதுகாக்க மாநகர சைபர் கிரைம் காவல் துறை சார்பில் விழிப்புணர்வுகளை தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறோம் என்றார்.

எங்கிருந்தோ அடையாளம் தெரியாத நபர்கள் பொதுமக்களின் ஆசைகளை தூண்டியும், அவர்களின் வங்கி தேவைகளை அறிந்தும் ஆன்லைனில் கொள்ளையடிப்பது வாடிக்கையாகி வரும் சூழலில் அதைத் தடுக்க ஒரே வழி முன்னெச்சரிக்கை நடவடிக்கையான விழிப்புணர்வே என்பது நிதர்சனம்.

Leave A Reply

Your email address will not be published.