பிராத்வெயிட் அபாரம்; போட்டியை டிரா செய்தது மேற்கிந்திய தீவுகள்.

வெஸ்ட் இண்டீஸ் – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது.

வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்துவரும் இங்கிலாந்து அணி 3 டெஸ்டுகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

இதில் இரு அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் டிரா ஆன நிலையில் பிரிட்ஜ்டவுனில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அந்த அணியில் மேத்யூ ஃபிஷர், சகிப் முகமது ஆகியோர் அறிமுகமானார்கள்.

இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட் இழப்புக்கு 507 ரன்களும் 2ஆவது இன்னிங்ஸில் 6 விக்கெட் இழப்புக்கு 185 ரன்களும் எடுத்து டிக்ளேர் செய்தது. வெஸ்ட் இண்டீஸ்அணி, முதல் இன்னிங்ஸில் 411 ரன்கள் எடுத்தது. 2ஆவது இன்னிங்ஸில் அந்த அணிக்கு 65 ஓவர்களில் 282 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. குறைந்த ஓவர்களில் 10 விக்கெட்டுகள் எடுத்து வெற்றி பெற வேண்டிய நிலைமை இங்கிலாந்துக்கு. இதனால் கடைசி நாள் ஆட்டம் பரபரப்பாக அமைந்தது.

வெஸ்ட் இண்டீஸ் அணி 44.3 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 93 ரன்களுடன் தடுமாறியது. எனினும் முதல் இன்னிங்ஸைப் போலவே 2ஆவது இன்னிங்ஸிலும் கேப்டன் கிரைக் பிராத்வைட் நீண்ட நேரம் விளையாடி அணியைக் காப்பாற்றினார்.
கிரைக் பிராத்வைட் 184 பந்துகளை எதிர்கொண்டு 56 ரன்களும் ஜோஷுவா ட சில்வா 30 ரன்களும் எடுத்துக் கடைசிவரை ஆட்டமிழக்காமல் ஆட்டத்தை டிரா செய்தார்கள். லீச் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

முதல் இன்னிங்ஸில் சதமும் 2ஆவது இன்னிங்ஸில் அரை சதமும் எடுத்த வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் கிரைக் பிராத்வைட் ஆட்ட நாயகனாகத் தேர்வானார்.

Leave A Reply

Your email address will not be published.