தெலுங்கானாவில் பழைய பொருட்கள் வைக்கும் குடோனில் பெரும் தீ விபத்து.. 11 தொழிலாளர்கள் உயிரிழப்பு!

தெலுங்கானாவில் பழைய பொருட்களை வைக்கும் குடோனில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் சிக்கி பீகாரைச் சேர்ந்த 11 கூலித் தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் உள்ள போயகுண்டா பகுதியில் பழைய பொருட்களை வாங்கி விற்பனை செய்யும் கடை ஒன்று உள்ளது. இந்த கடையில் பீகார் மாநிலத்தை சேர்ந்த 15 கூலித் தொழிலாளர்கள் வேலை செய்து வந்தனர். நேற்று வேலை முடிந்த பின் வழக்கம் போல் அவர்கள் கடையின் குடோன் உள்ளே படுத்து தூங்கிக்கொண்டு இருந்தனர்.

இந்நிலையில், இன்று அதிகாலையில் அந்த குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அந்த சமயத்தில் கடைக்குள் தூங்கி கொண்டிருந்த 15 தொழிலாளர்களும் தீ விபத்தில் சிக்கிக்கொண்டனர். இதில் 2 பேர் மட்டும் அங்கிருந்து தப்பிவிட்டனர்.

கடையில் இருந்த 11 தொழிலாளர்களும் தீ விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 2 பேரை காணவில்லை. அவர்களை தேடும் பணிகள் தீவிரமாக நடை பெறுகின்றன.

இதனிடையே, தீ விபத்து குறித்து தகவல் அறிந்த செகந்திராபாத் தீயணைப்பு படையினர், 3 தீயணைப்பு வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்தி அணைத்தனர்.

தொடர்ந்து, இந்த தீ விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் அதற்கான காரணம் பற்றி விசாரித்து வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில், மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்றும், கடையில் பழைய மரங்கள் இருந்ததாலும் தீ மளமளவென்று பரவியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.