மனைவியின் விருப்பம் இல்லாமல் கணவனே உறவு கொண்டாலும், அது பாலியல் வன்கொடுமையே: கர்நாடக உயர்நீதிமன்றம்

மனைவியின் விருப்பம் இல்லாமல் கட்டாயப்படுத்தி அவருடன் உடலுறவு கொள்வதும் ஒரு வகையான பாலியல் வன்கொடுமை தான் என கூறி கணவர் மீதான வழக்குப் பதிவை நீக்குவதற்கு கர்நாடகா உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

விருப்பமில்லாத மனைவியுடன் பாலியல் வல்லுறவு கொண்டதாக மனைவி அளித்த புகாரின் பேரில் கணவர் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் அவர் தனது மகளையும் கட்டாயப்படுத்தி அவரை பாலியல் வல்லுறவு செய்ததாக புகார் அளித்ததால், அந்த நபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தனது மனைவி கொடுத்த பாலியல் வன்கொடுமை புகாரை நீக்க வேண்டும் என்பதற்காக கணவர் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி எம்.நாகபிரசன்னா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனைவியின் விருப்பம் இல்லாமல் கட்டாயப்படுத்தி அவருடன் உடலுறவு கொள்வதும் ஒரு வகையான பாலியல் வன்கொடுமை தான் என்றார்.

தொடர்ந்து, கணவன் தனது மனைவி மீது நடத்தும் இத்தகைய பாலியல் வன்கொடுமையால் மனைவியின் மனதளவில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும், அது அந்த பெண்ணின் மீது உளவியல் மற்றும் உடலியல் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. கணவர்களின் இத்தகைய செயல்கள் மனைவிகளின் ஆன்மாவை காயப்படுத்துகிறது. அதனால், கணவர் மீதான பாலியல் வன்கொடுமை வழக்கை நீக்க உத்தரவிட முடியாது என நீதிபதி தீர்ப்பளித்தார்.

மேலும் அவர் கூறும்போது, ஒரு ஆண் என்பவன் ஆண்தான், ஒரு செயல் என்பது செயல்தான், பாலியல் வன்கொடுமை என்பது பாலியல் வன்கொடுமைதான். அதை கணவர் என்ற பெயரில் ஒரு ஆண், மனைவி எனும் பெண் மீது நடத்தினாலும் அது குற்றம்தான். திருமணம் செய்து கொண்டதாலேயே கணவருக்கு எந்த வித சிறப்பு தனிப்பட்ட சலுகைகளும் தர முடியாது.

ஒரு கணவர் தனது மனைவியை தனக்கு சொந்தமாகவே பார்க்கிறார். கணவர்கள் என்பவர்கள் மனைவிகளை ஆள்பவர்களாகவே பழங்கால மரபுகளும் கலாச்சாரங்களும் பார்க்கின்றன. அரசியலமைப்பு சட்டத்தின் படி ஆணும் பெண்ணும் சரிசமமாகவே பாவிக்க வேண்டும். எனவே கணவர் மீதான பாலியல் வன்கொடுமை புகாரை ரத்து செய்ய முடியாது என்றார்.

அரசியலமைப்பின் கீழ் அனைத்து மனிதர்களும் சமமாக நடத்தப்பட வேண்டும், அது ஒரு ஆணாக இருந்தாலும், அது ஒரு பெண்ணாக இருந்தாலும், யாராக இருந்தாலும் சரி என்று அவர் தெரிவித்துள்ளார்.

18 வயதுக்கு மேற்பட்ட மனைவியின் விருப்பம் இல்லாமல் கணவன் உறவுகொள்வது கிரிமினல் குற்றமல்ல என்கிறது இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 375. கடந்த 2018ம் ஆண்டில் இதேபோன்ற ஒரு வழக்கு குஜராத் உயர்நீதிமன்றத்தில் நடந்தது. அதில், திருமணமான ஒருவர் தனது மனைவி தாக்கல் செய்த பாலியல் வல்லுறவு வழக்கை ரத்து செய்யக் கோரியிருந்தார்.

அதில், பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டு குறித்த எஃப்ஐ ஆரை உயர்நீதிமன்றம் ரத்து செய்த போதிலும், திருமண பாலியல் வல்லுறவை குற்றமாக்க வேண்டியதன் அவசியம் குறித்து நீண்ட காரணத்தை அளித்தது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.