தமிழர் மனதை வெல்லவே கோட்டாவின் பேச்சு நாடகம் அரங்கேற்றம்! – சஜித் அணி சாடல்.

“சிங்கள மக்களால் வெறுத்து ஒதுக்கப்பட்டுவரும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, தமிழ் மக்களின் மனதை வெல்லவும் சர்வதேச சமூகத்தைச் சமாளிக்கவுமே பேச்சு நாடகத்தை அரங்கேற்றுகின்றார்.”

இவ்வாறு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

“கோட்டாபயவின் இந்த நாடகத்துக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் துணைபோகக்கூடாது. அவர்கள் கடந்தகாலச் சம்பவங்களை நினைவில் வைத்துக்கொண்டு நிதானமாகச் செயற்பட வேண்டும்” எனவும் ஐக்கிய மக்கள் சக்தி சுட்டிக்காட்டியுள்ளது.

“பேச்சை மேசையைக் கூட்டமைப்பினர் சரிவரப் பயன்படுத்த வேண்டும். அதைவிடுத்துக் கோட்டாபய அரசைக் காப்பாற்றும் வகையில் அவர்கள் செயற்படக்கூடாது” எனவும் சஜித் அணி வலியுறுத்தியுள்ளது.

“தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்க வேண்டும் என்பதில் ஐக்கிய மக்கள் சக்தி உறுதியாகவுள்ளது. ஆனால், தமிழர்களுக்குத் தீர்வை வழங்க இந்தக் கோட்டாபய அரசு ஒருபோதும் முன்வரமாட்டாது” எனவும் ஐக்கிய மக்கள் சக்தி மேலும் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும் இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறுகின்றது. இது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார எம்.பி. ஊடகங்களிடம் கருத்துரைக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.