வங்கதேசத்துடன் முதல் டெஸ்ட் தென் ஆப்ரிக்கா 367 ரன் குவிப்பு.

வங்கதேச அணியுடன் நடக்கும் முதல் டெஸ்ட் போட்டியில், தென் ஆப்ரிக்கா முதல் இன்னிங்சில் 367 ரன் குவித்து ஆல் அவுட்டானது.கிங்ஸ்மீட் மைதானத்தில் நடக்கும் இப்போட்டியில், டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பந்துவீசியது. தென் ஆப்ரிக்கா முதல் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 233 ரன் எடுத்திருந்தது. கேப்டன் எல்கர் 67, எர்வீ 41, கீகன் 19, ரிக்கெல்டன் 21 ரன்னில் ஆட்டமிழந்தனர். பவுமா 53, கைல் வெரைன் 27 ரன்னுடன் நேற்று 2ம் நாள் ஆட்டத்தை தொடங்கினர்.

கைல் மேற்கொண்டு 1 ரன் மட்டுமே சேர்த்து பெவிலியன் திரும்ப, அடுத்து வந்த முல்டர் சந்தித்த முதல் பந்திலேயே டக் அவுட்டாகி வெளியேறினார். சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பவுமா 93 ரன் (190 பந்து, 12 பவுண்டரி) எடுத்து மிராஸ் பந்துவீச்சில் கிளீன் போல்டானார். மகராஜ், 19, வில்லியம்ஸ், ஆலிவியர் தலா 12 ரன் எடுத்து ஆட்டமிழக்க, தென் ஆப்ரிக்கா முதல் இன்னிங்சில் 367 ரன்னுக்கு ஆல் அவுட்டானது (121 ஓவர்). சைமன் ஹார்மர் 38 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.வங்கதேச பந்துவீச்சில் காலித் அகமது 4, மிராஸ் 3, எபாதத் 2 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, வங்கதேச அணி முதல் இன்னிங்சை தொடங்கி விளையாடி வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.