மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த ‘பீஸ்ட்’ டிரைலர் வெளியாகி உள்ளது (Video).

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான நடிகர் விஜய் தற்போது ‘பீஸ்ட்’ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தை இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கியுள்ளார். நடிகை பூஜா ஹெக்டே விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும் யோகி பாபு, செல்வராகவன் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் நடித்துள்ளனர்.

பீஸ்ட் திரைப்படம் வருகிற 13-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. சிவகார்த்திகேயன் எழுதி, அனிருத் பாடிய அரபிக்குத்து பாடல் முன்னதாக வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் யூ டியூப்பில் இந்த பாடல் 250 மில்லியன் பார்வைகளை கடந்து புதிய சாதனையை படைத்தது.

இந்தியாவில் முதல்முறையாக பீஸ்ட் திரைப்படத்தின் டிரைலர் ‘பிரீமியம் லார்ஜ் ஃபார்மட்’ என்ற நவீன டெக்னாலஜி முறையில் வெளியாக உள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அறிவித்திருந்தது.

பீஸ்ட் படத்தின் டிரைலர் வெளியாவதை மதுரை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் திரையரங்கு முன்பு விஜய் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடினர்.

இந்த நிலையில் மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த பீஸ்ட் திரைப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது. டிரைலரின் மூலம் பெரிய வர்த்தக கட்டிடம் ஒன்றில் உள்ளவர்களை தீவிரவாதிகள் பிணைக்கைதிகளாக பிடித்து வைத்திருப்பது போன்றும் அப்போது அவர்களுடன் அங்கு இருக்கிற இராணுவ வீரரான விஜய் தீவிரவாதிகளின் பிடியில் இருந்து அவர்களை விடுவிப்பது போன்றும் படத்தின் கதை இருக்கலாம் என்று தெரிய வருகிறது.

படத்தில் இடம்பெற்றுள்ள அதிரடி காட்சிகள் படத்திற்கான எதிர்பார்ப்புகளை இன்னும் அதிகப்படுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.