கொழும்பில் தகவல் சேகரிப்பு தொடர்பில் பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு

கொழும்பு மாவட்டத்தின் பல குடியிருப்பாளர்களிடம் விபரங்களை சேகரித்த, ஒரு அரசியல் கட்சி ஆதரவாளர்கள் எனச் சந்தேகிக்கப்படும் அடையாளம் தெரியாத குழு தொடர்பில், பதில் பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் பிரச்சாரக் காலத்திற்கு முன்னதாக, இனந்தெரியாக குழு ஒன்று இவ்வாறு வீடுகளில் இருந்து தகவல்களை சேகரிப்பது தொடர்பில் குழப்பமான சூழல் நிலவுவதாக தேர்தல் வன்முறை கண்காணிப்பு மையம், பதில் பொலிஸ்மா அதிபர் சீ.டி விக்ரமரத்னவிற்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஒவ்வொரு பகுதியிலும் அமைந்துள்ள பொலிஸ் நிலையங்களால் தகவல் சேகரிப்பு செயற்பாடு ஒழுங்கமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் தேர்தல் வன்முறை கண்காணிப்பு மையம், எனினும் பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் 76ஆவது பிரிவின் கீழ் தகவல் சேகரிப்பிற்கு இனந்தெரியாதவர்களை அனுப்புவது சிக்கலான விடயமாக அமைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

வீடுகளில் இருந்து இதுபோன்ற தகவல்களை சேகரிக்கும் விடயமானது பதில் பொலிஸ் மா அதிபரின் ஆலோசனை மற்றும் சரியான அறிவுறுத்தல்களின் அடிப்படையில் செயற்படுத்தப்படுகின்றதா? என அந்த மையத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் மஞ்சுல கஜநாயக்கவின் கையொப்பத்துடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

குடியிருப்புகள் தொடர்பிலான புதுப்பிக்கப்பட்ட தகவல்களைப் தன்வசம் வைத்திருக்கும் அரச அதிகாரியான கிராம சேவகரிடம் தகவல்களைச் சேகரிக்காமல் தனிமைப்படுத்தப்பட்ட சட்டங்கள் கடுமையாக அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், வீடுகளுக்கு ஏன் இனந்தெரியாதவர்கள் செல்கின்றார்கள் எனவும் அவர் குறித்த கடிதத்தின் ஊடாக கேள்வி எழுப்பியுள்ளார்.

“இந்த முயற்சிக்கு அடையாளம் தெரியாதவர்களை இணைத்துக் கொண்டதன் நோக்கம் என்ன? அத்தகையவர்களை தேர்ந்தெடுப்பதற்கான அளவுகோல்கள் யாவை? தேர்தலுக்கு முன்னதாக அத்தகைய அடையாளம் தெரியாதவர்களை இணைத்துக் கொண்டுள்ளமை (ஒரு அரசியல் கட்சிக்கு விசுவாசமான உறுப்பினர்கள் மட்டுமே இதில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என பலர் குற்றம் சாட்டுகின்றனர்). தேர்தலின் போது நிலவவேண்டிய அமைதியான மற்றும் சுதந்திரமான சூழலை சீர்குலைப்பதாக இது அமையாதா? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதே போன்ற தகவல்களை, ஆறு மாதங்களுக்கு முன்னர் பொலிஸார் சேகரித்ததாகவும் மஞ்சுல கஜநாயக்க தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த விடயத்தை கருத்திற்கொண்டு, இந்த செயற்பாட்டின் நோக்கங்கள் மற்றும் எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து தெளிவான மற்றும் உத்தியோகபூர்வ அறிக்கையை வெளியிடுமாறு தேர்தல் வன்முறை கண்காணிப்பு மையம் பதில் பொலிஸ்மா அதிபரிடம் கோரியுள்ளது.

கடிதத்தின் நகல் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய,, தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் நிஷாந்த ஏ.வீரசிங்க, மேல் மாகாண சிரேஷ்ட பொலிஸ் மாஅதிபர் தேசபந்து தென்னகோன் மற்றும் தேர்தலுக்காக சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய ஆகியயோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Comments are closed.