பாகிஸ்தானில் மீண்டும் ஷெரீஃப் குடும்பம்..

ஷெபாஸ் அரசியலில் கடந்து வந்த பாதை…

யார் இந்த ஷெபாஸ் ஷெரீஃப்…
பாகிஸ்தான் அரசியலில் இவரது பங்கு என்ன?

பாகிஸ்தானை மூன்று முறை ஆட்சி செய்த முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப்பின் இளைய சகோதரர்தான் இந்த ஷெபாஸ் ஷெரீஃப். காஷ்மீரைப் பூர்வீகமாகக் கொண்ட ஷெரீஃப் குடும்பம், பாகிஸ்தான் அரசியலிலும், தொழில் துறையிலும் புகழ்பெற்று விளங்கியது.

பாகிஸ்தானின் லாகூரில் வசித்துவந்த ஷெரீஃப் குடும்பம், எஃகு தொழிலைச் செய்துவந்தது. எஃகு தொழில் மூலம் செல்வ செழிப்பு மிக்க குடும்பமாக மாறியது ஷெரீஃப்பின் குடும்பம். அந்தக் குடும்பத்திலிருந்து முதன்முறையாக அரசியலுக்கு வந்தவர் நவாஸ் ஷெரீஃப்தான்.

முதலில் தந்தை வழியில், எஃகு தொழிலில் களமிறங்கி `பாகிஸ்தான் ஸ்டீல்ஸ்’ என்ற நிறுவனத்தை நடத்தினார் ஷெபாஸ். பின்னர், அண்ணன் வழியில் அரசியலிலும் களம் கண்டார். 1980-களில் அரசியல் களத்தில் இறங்கினார் ஷெபாஸ்.

1988-ம் ஆண்டு நடைபெற்ற மாகாணத் தேர்தலில், பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்று, பாகிஸ்தான் நாடாளுமன்ற உறுப்பினரானர். தொடர்ந்து படிப்படியாக அரசியல் வளர்ச்சி பெற்று, பஞ்சாப் மாகாண மக்களின் நம்பிக்கையையும் பெற்றார். 1997 தேர்தலில் வெற்றிபெற்று பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் ஷெபாஸ்.

முதல்வர் பொறுப்பேற்ற சில மாதங்களில், பாகிஸ்தானின் முதல் நவீன போக்குவரத்து அமைப்புகளை லாகூரில் தொடங்கினார். பொதுமக்களுக்கான இந்தப் போக்குவரத்து அமைப்பு மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. தொழில்துறை, விவசாயம், கல்வி, சுகாதாரம் ஆகிய நான்கு துறைகளில் அதிக கவனம் செலுத்தினார். நான்கு துறைகளும் வளர்ச்சியடைய, மக்கள் மத்தியில் பெரிய தலைவராக உருவெடுத்தார் ஷெபாஸ்.

இவர் பதவிக்கு வந்த இரண்டே ஆண்டுகளில், பாகிஸ்தானில் ராணுவப் புரட்சி ஏற்பட்டு, ஆட்சிக் கவிழ்க்கப்பட்டது. அந்தச் சமயத்தில் முதல்வர் பதவியை இழந்ததோடு, சிறையிலும் அடைக்கப்பட்டார் ஷெபாஸ். 2000-ம் ஆண்டில், சவூதி அரேபியாவுக்கு நாடு கடத்தப்பட்டார். அதன் பிறகு ஏழு ஆண்டுகள் பாகிஸ்தான் பக்கமே வராமல் இருந்தார். நிலைமை சற்று சரியானதும், 2007-ம் ஆண்டு மீண்டும் பாகிஸ்தானுக்குத் திரும்பினார்.

1997-99 காலகட்டத்தில் நல்லாட்சி செய்த காரணத்தால், ஷெபாஸ் மீது 2008 தேர்தலில் நம்பிக்கை வைத்து வாக்களித்தனர் பஞ்சாப் மாகாண மக்கள். 2008 முதல் 2013 வரையிலான ஆட்சிக் காலத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைக் கொண்டுவந்தார் ஷெபாஸ். விளைவு அடுத்த தேர்தலிலும் வென்று, மீண்டும் பஞ்சாப் மாகாண முதல்வரானார்.

2017 வரை மாகாண அரசியலில் ஈடுபட்டுவந்தவர், அதன் பின்னர் தேசிய அரசியலில் காலடியெடுத்து வைத்தார். அந்தச் சமயத்தில் பிரதமராக இருந்த ஷெபாஸின் அண்ணன் நவாஸ், பனாமா பேப்பர்ஸ் ஊழல் வழக்கில் சிக்கினார். இதன் காரணமாகப் பிரதமர் பதவியை இழந்தார். கட்சி பதவியிலிருந்தும் விலகினார்.

இதையடுத்து பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியின் தலைவரானார் ஷெபாஸ் ஷெரீஃப். நவாஸ் ஷெரீஃப் மீது வைக்கப்பட்டது போலவே ஷெபாஸ் ஷெரீஃப் மீதும் எக்கச்சக்க ஊழல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. ஆனால் எந்தக் குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்படாததால், 2018 பொதுத் தேர்தலில் போட்டியிட்டார் ஷெபாஸ்.

இவர் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சி 82 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்றது. பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவரானர் ஷெபாஸ்!

இம்ரான் கான் ஆட்சிக்கு வந்ததும், ஷெபாஸ் மீதும் அவரின் மகன் ஹம்சா மீதும் பல்வேறு வழக்குகள் பாய்ந்தன. அவர்களுக்குச் சொந்தமான சொத்துகள் சில முடக்கப்பட்டன. 2019-ம் ஆண்டில் ஷெபாஸ் கைது செய்யப்பட்டுச் சிறையிலடைக்கப்பட்டார்.

பல மாதங்கள் சிறையிலிருந்தவர், 2021-ம் ஆண்டு வெளியே வந்தார். தன்னை சிறையிலடைத்த இம்ரான் கானை பழி தீர்க்க நினைத்து, எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கத் தொடங்கினார் ஷெபாஸ். தான் நினைத்தபடியே தற்போது இம்ரான் கான் அரசைக் கவிழ்த்துவிட்டார்.

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ஷெபாஸுக்கு ஆதரவளித்திருப்பதால், பாகிஸ்தானின் அடுத்த பிரதமராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

ஷெபாஸின் அண்ணன் நவாஸ், பாகிஸ்தான் ராணுவத்துடன் மோதல் போக்கைக் கடைப்பிடித்ததால், ஆட்சியை இழந்தார். ஆனால், ராணுவத் தளபதிகளுடன் நெருக்கம் காட்டிவருகிறார் ஷெபாஸ். எனவே, ஷெபாஸ் தலைமையில் ஆட்சி, சில காலத்துக்கு சுமுகமாகச் செல்லும் என எதிர்பார்க்கலாம்.

அதே நேரத்தில், நாட்டின் பொருளாதார நிலை மிகவும் மோசமாக இருப்பதால், அதை அவர் எப்படிச் சமாளிக்கப்போகிறார் என்ற கேள்விகள் எழுந்திருக்கின்றன. அந்நியச் செலாவணி தட்டுப்பாடு, பணவீக்கம் ஆகிய சவாலான விஷயங்கள், ஷெபாஸ் தலைமையிலான அரசு எப்படி எதிர்கொள்ளப்போகிறது என்ற விவாதங்களும் கிளம்பியிருக்கின்றன.

ஷெபாஸ் அமெரிக்காவுக்கு எதிராகவும், சீனாவுக்கு ஆதரவாகவும் செயல்படக்கூடியவர். எனவே, அவரது வெளியுறவுக் கொள்கைகள் எப்படியிருக்கப் போகின்றன என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!

Leave A Reply

Your email address will not be published.