சசிகலா பதவி நீக்கம் செல்லும்…. அதிமுகவில் அடுத்து என்ன நடக்கும்?

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, 2016-ஆம் ஆண்டு அதிமுகவின் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார் சசிகலா. ஆனால், சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து 2017 செப்டம்பர் மாதம் நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், பொதுச் செயலாளர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார்.

இந்த நிலையில், கடந்த ஆண்டு பெங்களூரு சிறையில் இருந்து சசிகலா வெளியே வந்த போது, தீவிர அரசியலில் ஈடுபடுவேன் எனவும், தொண்டர்களை சந்திப்பேன் என்றும் அறிவித்தார். விரைவில் அவர் அரசியல் வியூகத்தை வகுப்பார் என பலரும் எதிர்பார்க்க, 2021 சட்டமன்றத் தேர்தலின் போது ஒற்றை அறிக்கையை வெளியிட்டு அனைத்தையும் புஸ்வானம் ஆக்கினார் சசிகலா. பொது வாழ்க்கையிலிருந்து ஒதுங்கி ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி அமைய விரும்புகிறேன் என அவர் கூறியது அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாகியது.

இப்படி சசிகலா அரசியலில் மெல்ல ஆழம் பார்த்துக் கொண்டிருக்க, மறுபுறம் அதிமுக இரட்டைத் தலைமையிலும் அவ்வபோது சிறு சிறு உரசல்கள் ஏற்பட்டன. அதிமுகவில் சசிகலாவை இணைக்க வேண்டும் என ஒரு தரப்பினர் தொடர்ந்து கோரிக்கை வைக்க, சசிகலாவை சந்தித்த ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜாவை கட்சியிலிருந்து தூக்கியது அதிமுக தலைமை. இந்த சூழலில், ஜெயலலிதாவின் மரணத்தை விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜரான ஓ.பன்னீர்செல்வம், ஜெயலலிதாவுக்கு எதிராக சசிகலா எந்த சதித்திட்டமும் தீட்டவில்லை எனக் கூறினார். செய்தியாளர்கள் சந்திப்பிலும், அவரை சின்னம்மா என்றே குறிப்பிட்டார்.

இப்படியான சூழலில்தான், அதிமுக பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கியதற்கு எதிராக சசிகலா தாக்கல் செய்த மனுவை, சென்னை உரிமையியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது. சசிகலாவுக்கு எதிராக மனுத்தாக்கல் செய்த ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ்., இருவரும் வழக்கில் வெற்றி கண்டிருக்கின்றனர். தீர்ப்பு வெளியான நிலையில், சென்னை ராயப்பேட்டையில், அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அதேசமயம், வழக்கில் மேல்முறையீடு செய்யப் போவதாக சசிகலா அறிவித்திருக்கிறார் . சசிகலாவின் இந்த, முடிவு வீண்முயற்சி என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

உரிமையியல் நீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலம் சறுக்கலை சந்தித்திருக்கிறார் சசிகலா. மறுபக்கம், ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி தலைமையில் இயங்குவதே அதிமுக என்பது உறுதியாகியுள்ளது. இப்படிப்பட்ட சூழலில், நீதிமன்ற தீர்ப்பின் முடிவுகளும், அதன் தாக்கங்களும் அதிமுகவிற்குள் எந்த மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தப்படும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Leave A Reply

Your email address will not be published.