மின் பாதிப்பு ஏற்படுகிறதா? உடனே இதை செய்யுங்கள் – பொதுமக்களுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி வேண்டுகோள்

தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் இனிகோ இருதயராஜ், ரவி, சாக்கோட்டை அன்பழகன் ஆகியோர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் புதிய துணை மின் நிலையங்கள் அமைக்க முதலமைச்சர் உத்தரவிட்டு, பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

மேலும், எங்கெல்லாம் துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட வேண்டுமோ, அங்கெல்லாம் ஆய்வு செய்து இந்த ஆண்டே புதிய துணை மின் நிலையங்கள் அமைக்கப்படும் என்றும், கடந்த ஆறு மாதத்தில் 1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், அதையொட்டி வரும் 16ஆம் தேதி காணொலிக்காட்சி வாயிலாக விவசாயிகளுடன் முதலமைச்சர் பேசவிருப்பதாகவும் கூறினார்.

இலவச மின் இணைப்புக்காக காத்திருந்த விவசாயிகளுக்கு மின் இணைப்பு கொடுக்கும் திட்டம் தொடங்கப்பட்டது. அதற்கான மின் இணைப்பு பணிகள் அனைத்தும் முடிந்து விட்டன. அதில் ஒரு லட்சமாவது விவசாயிக்கு ஆணையினை முதலமைச்சர் வரும் 16ஆம் தேதி ஆணை வழங்க உள்ளார். ஒரு லட்சம் விவசாயிகள் காணொலிக் காட்சி மூலமாக அந்தந்தப் பகுதிகளில் இருந்து பங்கேற்கிறார்கள். கோடை காலத்தில் தமிழகத்தில் தடையில்லா மின்சாரத்தை வழங்குவதற்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. கோடை வெயிலை எதிர்கொள்ள அனைத்துவிதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது.

நிலக்கரி பற்றாக்குறையால் மின் உற்பத்தி குறைந்து விடக்கூடாது என்பதற்காக 4 லட்சத்து 80 ஆயிரம் டன் நிலக்கரி டெண்டர் விடப்பட்டு இருக்கிறது. 216 துணை மின் நிலையங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன மின்சார உற்பத்திக்கு தேவையான திட்டங்கள் மற்றும் விநியோகம் செய்வதற்கான பணிகள் திட்டமிடப்பட்டுள்ளன. 29.03.2022 அன்று 17196 மெகா வாட் மின் வினியோகம் இதுவரை இல்லாத அளவு நுகர்வு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

மேலும், பொது மக்களுக்கு ஒரு வேண்டுகோள், சமூக வலைதளங்களில் மின்பாதிப்பு குறித்து மின்சார வாரியத்தை டேக் செய்தால், தங்களுடைய இணைப்பு எண்ணுடன் பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. பராமரிப்புப் பணிகளால் மட்டுமே மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது, மற்றபடி சீரான மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

மின் பற்றாக்குறையால் மின் வினியோகம் நிறுத்தி வைக்கப்படுகிறது என்ற பிரச்னையே இல்லை. இதற்காக முன்பே முதலமைச்சர் முன்னெச்சரிக்கையாக பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துள்ளார். மின்வாரியத்தில் பல்வேறு செலவினங்களை குறைத்தது காரணமாக 2,200 கோடி ரூபாய் சேமிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.