நம்பிக்கையில்லாப் பிரேரணை: கூட்டமைப்பு இன்னும் முடிவில்லை! – சுமந்திரன் தகவல் .

“அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளிக்குமா? இல்லையா? என்ற கேள்விக்கு இன்னமும் முடிவெடுக்கவில்லை என்றுதான் எம்மால் இப்போதைக்குப் பதில் தர முடியும்.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

“அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஐக்கிய மக்கள் சக்தி இன்னமும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை. பிரேரணை சமர்ப்பிக்கப்பட்ட பின்னர்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு ஒன்றுகூடி அப்பிரேரணையை ஆதரிப்பதா? இல்லையா? என்று முடிவெடுக்கும்” என்றும் சுமந்திரன் எம்.பி. மேலும் கூறினார்.

இதேவேளை, அரசுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியால் முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளதாக ஜே.வி.பி. மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட அரசிலிருந்து வெளியேறிய சுயாதீன எம்.பிக்கள் குழு ஆகியன இன்று அறிவித்துள்ளன.

அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிக்க 120 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாராகவுள்ளனர் என்று முன்னாள் அமைச்சரும் புதிய ஹெல உறுமயவின் தலைவருமான உதய கம்மன்பில எம்.பி. இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.