அல்ஜசீரா செய்தியாளர் துப்பாக்கிசூட்டில் பலி.

ஆக்கிரமிப்பில் உள்ள மேற்கு கரை நகரமான ஜெனின் என்ற இடத்தில் இஸ்ரேல் படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில், ‘அல்ஜசீரா’ ஊடகத்தை சேர்ந்த பெண் செய்தியாளர் ஷிரின் அபு அக்லா, 51, உயிரிழந்தார்.

மேற்காசிய நாடுகளான இஸ்ரேல்-, பாலஸ்தீனம் இடையே நீண்டகாலமாக எல்லை பிரச்சினை நீடித்து வருகிறது. சர்ச்சைக்குரிய மேற்கு கரை பகுதியில் பாலஸ்தீனர்கள் இஸ்ரேலியர்களை தாக்குவதும், அவர்களை இஸ்ரேல் பொலிஸார் மற்றும் ராணுவத்தினர் சுட்டுக்கொல்வதும் வாடிக்கையான சம்பவமாகிவிட்டது.

இந்நிலையில், அல்ஜசீரா ஊடகத்தின் மூத்த செய்தியாளர் ஷிரீன் அபு அக்லா, 51, மேற்கு கரையின் ஜெனின் நகரில் உள்ள அகதிகள் முகாமில் செய்தி சேகரிக்க சென்றார். அப்போது, இஸ்ரேல் படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில், அவர் தலையில் குண்டு பாய்ந்து உயிரிழந்ததாக பாலஸ்தீன சுகாதாரத்துறை தெரிவித்தது.

செய்தியாளர்களுக்கான பிரத்யேக கறுப்பு நிற, ‘ஜாக்கெட்’ அணிந்திருந்தும் அத்துமீறி அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஜெருசலேமை தளமாக கொண்ட, ‘அல் – குத்ஸ்’ நாளிதழின் செய்தியாளர் அலி சமோதி மீதும் துப்பாக்கி குண்டு பாய்ந்தது. இதில் காயம் அடைந்த அவர், தற்போது சிகிச்சை பெற்று வருகிறார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.