‘மே 18’ புலிகள் தாக்குவார்களா? – பாதுகாப்பு அமைச்சு விளக்கம்.

மே மாதம் 18ஆம் திகதியன்று தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீண்டும் ஒருங்கிணைந்து இலங்கை மீது தாக்குதல் நடத்துவதற்குத் திட்டமிட்டுள்ளது என இந்தியாவின் ‘த ஹிந்து’ வெளியிட்டுள்ள செய்தி தொடர்பில் இலங்கை புலனாய்வுப் பிரிவு, இந்தியப் புலனாய்வுப் பிரிவிடம் வினவியுள்ளது என இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமால் குணரத்ன தெரிவித்தார்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு, இந்தத் தாக்குதலை நடத்துவதற்குத் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் திட்மிடப்பட்டுள்ளது எனக் கடந்த 13ஆம் திகதி ‘த ஹிந்து’ செய்தி வெளியிட்டிருந்தது.

இந்தியப் புலனாய்வுத் தகவல்களை குறிப்பிட்டே அந்தச் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், இது வழமையான புலனாய்வுத் தகவல் என இந்தியப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர் என்று இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இந்தத் தகவல் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் மேலதிக தகவல் கிடைக்கும் பட்சத்தில் அதனை அறிவிப்பதாகவும் இந்தியப் புலனாய்வுப் பிரிவு, இலங்கைப் புலனாய்வுப் பிரிவிடம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், இந்தியப் புலனாய்வுப் பிரிவினர் வௌியிட்டுள்ள இந்தத் தகவல் உள்ளிட்ட தேசிய பாதுகாப்பு தொடர்பில் புலனாய்வு மற்றும் பாதுகாப்புப் படையினருக்கு கிடைக்கும் அனைத்து தகவல்களையும் உரிய முறையில் ஆராய்ந்து சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அறிவித்து பாதுகாப்பைப் பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.