கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டருக்கு சிபிஐ காவல் நீட்டிப்பு

காங்கிரஸைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கரராமனை விசாரிக்க மேலும் 3 நாள்கள் சிபிஐ காவல் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பஞ்சாப் மாநிலம், மான்ஸா பகுதியில் தனியார் நிறுவனத்தால் அமைக்கப்பட்டு வந்த மின் திட்டப் பணிகளில் வேலை செய்ய 263 சீனர்களுக்கு முறைகேடாக ஒரே மாதத்தில் விசா வழங்க ரூ. 50 லட்சம் லஞ்சமாக பெற்றதாக கார்த்தி சிதம்பரம் உள்பட 5 பேர் மீது சிபிஐ காவல்துறையினர் நேற்று முன்தினம்(மே-17) வழக்குப் பதிவு செய்தனர்.

தொடர்ந்து, கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான சென்னை வீடு உள்பட மும்பை, ஒடிசா, கர்நாடகம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் மொத்தம் 10 இடங்களில் கடந்த வாரம் சிபிஐ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

சோதனையின்போது, கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கரராமனை சிபிஐ அதிகாரிகள் மே 18ஆம் தேதி கைது செய்தனர்.

இதனைத் தொடர்ந்து தில்லி சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பாஸ்கரராமனை விசாரிக்க சிபிஐக்கு 4 நாள்கள் காவலில் எடுக்க அனுமதி வழங்கியிருந்தனர்.

இன்று காவல் முடிவடைந்த நிலையில், சிபிஐ நீதிமன்றத்தில் பாஸ்கரராமன் ஆஜர்படுத்தப்பட்டார். தொடர்ந்து, மேலும் 3 நாள்கள் சிபிஐ காவலில் எடுத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.