தீவிரமடையும் மங்கிபாக்ஸ் – படுக்கைகளை தயார் செய்து உஷார் நிலையில் மும்பை

கோவிட் பெருந்தொற்று பாதிப்பில் சிக்கித் தவித்த உலக நாடுகள் கடந்த சில மாதங்களாக மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி வரும் நிலையில், புதிதாக பரவிவரும் மங்கிபாக்ஸ் வைரஸ் தொற்று எனப்படும் குரங்கு அம்மை பாதிப்பால் பீதியடைந்துள்ளனர்.

இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த பரவலின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் வரப்போகும் நாள்களில் பாதிப்பு உயரவே வாய்ப்புகள் அதிகம். எனவே நிலைமையை உலக சுகாதார அமைப்பு கூர்ந்து கண்காணித்து வருகிறது என கூறியுள்ளது.

இந்த மங்கிபாக்ஸ் நோய் பரவல் குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் கவலை தெரிவித்துள்ளார். இதற்கு எந்த தடுப்பூசி பயன்படுத்த வேண்டும் என்ற ஆய்வை அமெரிக்க நோய் தடுப்பு அமைப்பு தீவிரமாக மேற்கொண்டுவருகிறது. கடந்த 10 நாள்களில் 12 நாடுகளில் 110க்கும் மேற்பட்டவர்களுக்கு இந்த மங்கிபாக்ஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த மங்கிபாக்ஸ் பாதிப்பு அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, பிரிட்டன், ஸ்பெயின், போர்ச்சுகல், ஜெர்மனி, பெல்ஜியம், பிரான்ஸ், நெதர்லாந்து, இத்தாலி, ஸ்வீடன் ஆகிய நாடுகளில் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்த தொற்று பாலியல் உறவுகளின் மூலம் பரவுவதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலக சுகாதாரத்துறை அமைப்பின் எச்சரிக்கையை தொடர்ந்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மான்டவியா, ’தேசிய நோய் தடுப்பு மையம் மற்றும் ஐசிஎம்ஆர் ஆகியவற்றை தொடர் கண்காணிப்பில் இருக்குமாறு உத்தரவிட்டுள்ளார். குறிப்பாக, மகாராஷ்டிரா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்கள் உஷார் நிலையிவ் உள்ளன. மும்பை நகரில் 28 படுக்கைகள் கொண்ட பிரத்தியேக வார்டுகளை மும்பை மாநகராட்சி அமைத்து தயார் நிலையில் உள்ளது. இந்த தொற்று பாதித்தவர்கள் 5-21 நாள்கள் பாதிப்பை சந்திக்க நேரிடும் எனவும், பாதிப்பு அறிகுறிகள் சருமத்தில் தென்படுவதற்கு 1-2 நாள்களுக்கு முன்னர் அந்நபருக்கு நோய் பரவியிருக்கம் என சுகாதாரத்துறை வழிகாட்டுதலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1958ம் ஆண்டு கோபன்ஹேகனில் உள்ள ஸ்டேட் சீரம் இன்ஸ்டிடியூட்டில் நடைபெற்ற ஆராய்ச்சிக்காக வைக்கப்பட்டிருந்த குரங்குகளிடையே பரவிய இந்த நோய் மனிதர்களிடையே 1970ம் ஆண்டு காங்கோவில் பரவத்தொடங்கியுள்ளது. குரங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவியதால் இந்த நோய் ‘மங்கி பாக்ஸ்’ என அழைக்கப்படுகிறது. மங்கி பாக்ஸ் வைரஸ் Poxviridae குடும்பத்தில் உள்ள Orthopoxvirus இனத்தைச் சேர்ந்தது. இந்த வைரஸ் பெரியம்மை, பசு, குதிரை மற்றும் ஒட்டகம் போன்றவற்றில் இருந்து பரவும் பாக்ஸ் நோயைச் சார்ந்தது.

Leave A Reply

Your email address will not be published.