ஊடகர் நடேசனின் நினைவேந்தல் மட்டக்களப்பில் இன்று அனுஷ்டிப்பு.

மட்டக்களப்பு மாவட்டத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், மட்டக்களப்பு ஊடக அமையம் மற்றும் கிழக்கு தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் ஆகியன ஒன்றிணைந்து நடத்திய மட்டக்களப்பில் படுகொலை செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் நாட்டுப்பற்றாளர் ஐயாத்துரை நடேசனின் 18 ஆவது நினைவேந்தல் நிகழ்வு மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாகவுள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் நினைவாக அமைக்கப்பட்ட நினைவுத்தூபியில் இன்று நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் மட்டக்களப்பு ஊடக அமையத்தின் தலைவர் வா.கிருஸ்ணகுமார் தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில், மட்டக்களப்பு மாநகர சபை மேயர் தியாகராஜா சரவணபவன், பிரதி மேயர் தி.சத்தியசீலன், முன்னாள் கிழக்கு மாகாண சபை பிரதித் தவிசாளர் இந்திரகுமார் பிரசன்னா மற்றும் மாநகர சபை உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் ஊடகர் அமரர் ஐயாத்துரை நடேசனின் திருவுருவப் படத்துக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு, ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இங்கு கருத்துத் தெரிவித்த மாநகர மேயர் தியாகராஜா சரவணபவன் மற்றும் முன்னாள் கிழக்கு மாகாண சபை பிரதித் தவிசாளர் இந்திரகுமார் பிரசன்னா ஆகியோர், “ஊடகவியலாளர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் வன்முறைகள் முற்றாக நிறுத்தப்பட்டு, அவர்கள் தமது ஊடகப் பணியைத் தங்கு தடையின்றி மேற்கொள்ள அரசு வழிசமைக்க வேண்டும். அத்தோடு ஊடகர் ஐயாத்துரை நடேசன் உட்பட படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கான நீதி நிலைநாட்டப்பட வேண்டும்” – என்றனர்.

Leave A Reply

Your email address will not be published.