வாடிக்கையாளர்களின் அடகு நகைகள் அபேஸ்.. நண்பர்களை வைத்து கொள்ளை நாடகமாடிய பெண் வங்கி மேலாளர்!

பெண் வங்கி மேலாளர் ஒருவர் தான் வேலை பார்த்த வங்கியில் வாடிக்கையாளர்களின் அடகு நகைகளை திருடி செலவு செய்துவிட்டு, நண்பர்களை வைத்து கொள்ளை நாடகமாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்திலுள்ள காளஹஸ்தி பகுதியில் தனியாருக்கு சொந்தமான (FINCARE MINFINACE BANK) என்ற வங்கி இயங்கி வருகிறது. கடந்த மாதம் மே.26ம் தேதி இந்த வங்கிக்கு இரவு நேரத்தில் வந்த கொள்ளையர்கள் அந்த நேரத்தில் அங்கு இருந்த பெண் மேலாளரை கட்டிப்போட்டு நகை மற்றும் பணத்தை திருடி சென்றதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

இந்த புகாரின் அடிப்படையில் 2 தனிப்படை அமைத்து திருப்பதி மாவட்ட போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டிருந்தனர். வங்கியில் அனைத்து பகுதியிலும் தீவிர சோதனை நடத்திய போலீசார் ஏதாவது துப்பு கிடைக்குமா என்று ஆய்வு செய்தனர். அப்போது அந்த வங்கியில் இருந்த கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் ஹார்ட்டிஸ்க் ஆகியவையும் காணாமல் போய் இருப்பதை கண்டு பிடித்தனர்.

எனவே மேலாளர் ஸ்ரவந்தி சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் வங்கியில் 4 ஆண்டுகள் மேலாளராக வேலை செய்து வரும் ஸ்ரவந்தி திட்டம்போட்டு நண்பர்களுடன் சேர்ந்து வங்கியில் கொள்ளையடித்தது தெரியவந்தது.

மேலும் வங்கியில் நகைக்கடன் பெறுவதற்காக பொதுமக்கள் அடமானம் வைத்த நகைகளை வேறு வங்கியில் அடமானம் வைத்து பணம் பெற்ற மேலாளர் ஸ்ரவந்தி அவற்றுக்கு பதிலாக போலி நகைகளை வங்கி லாக்கரில் வைத்ததும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதுபோல் மோசடியில் ஈடுபட்டு கிடைத்த பணத்தை மேலாளர் ஸ்ரவந்தி சொந்த செலவுக்கு பயன்படுத்திக்கொண்டார்.

இதனால் எதிர்காலத்தில் பிரச்சனை ஏற்படும் என்பதை உணர்ந்த அவர் நண்பர்களுடன் சேர்ந்து கொள்ளை நாடகம் நடத்த முடிவு செய்தார். இதற்காக தன்னுடைய நண்பர்களான நவீன், சுல்தான் முஹம்மத், விஜயகுமார் ஆகியோரை பயன்படுத்தியுள்ளார்.

மேலும் சென்னையை சேர்ந்த ஜிம்ஹமத், ஜெகதீஷ் குமார், ஆண்டனிராஜ், அருண் ஆகியோரையும் பயன்படுத்தி வங்கியில் கொள்ளையடிக்க திட்டமிட்டார். திட்டமிட்டபடி வங்கி லாக்கரில் இருந்த பணம், நகை ஆகியவற்றை நண்பர்கள் மூலம் திருட செய்து கொள்ளை நடந்து விட்டது என்று நாடகமாடினார்.

அப்போது வங்கியில் திடீரென்று புகுந்த கொள்ளையர்கள் தன்னை கட்டிப்போட்டு லாக்கரை திறந்து பணம் நகைகள் ஆகியவற்றை எடுத்து சென்று விட்டனர் என்று போலீஸில் ஸ்ரவந்தி புகார் அளித்தார். இந்த நிலையில் மேலாளர் ஸ்ரவந்தி மீது சந்தேகம் அடைந்து அவரை பிடித்து விசாரணை செய்தபோது நடைபெற்ற கொள்ளை நாடகம் தெரியவந்தது.

ஏழு பேரையும் கைது செய்த திருப்பதி மாவட்ட போலீசார் அவர்களிடம் இருந்து ஒரு கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் 3 லட்சத்தி 50 ஆயிரம் ரூபாய் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலாளர் ஸ்ரவந்தி தான் பணியாற்றும் வங்கியில் பொதுமக்கள் அடமானம் வைத்த நகைகளில் எவ்வளவு நகைகளை வேறு வங்கியில் அடமானம் வைத்திருக்கிறார் என்று தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. வங்கியில் மேலாளராக பணி புரியும் பெண் அதே வங்கியின் நண்பர்களை பயன்படுத்திக் கொள்ளை அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.