“அக்னிபத்’ வழக்கு பட்டியலிடப்படுவதை தலைமை நீதிபதி முடிவு செய்வார்: உச்சநீதிமன்றம்

மத்திய அரசு கொண்டுவந்துள்ள அக்னிபத் திட்டம் தொடர்பாக நிபுணர்கள் குழு ஆய்வு நடத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பொதுநல வழக்கை விசாரணைக்குப் பட்டியலிடுவது தொடர்பாகத் தலைமை நீதிபதி முடிவு செய்வார் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
முப்படைகளிலும் குறுகிய காலத்துக்கு வீரர்களைச் சேர்ப்பதற்கான அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தவுள்ளது. அத்திட்டத்துக்கு எதிராக உத்தர பிரதேசம், பிகார், தெலங்கானா, பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட பல மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. சில பகுதிகளில் போராட்டம் வன்முறையாக மாறியது. ரயில்கள், அரசு அலுவலகங்கள் உள்ளிட்டவை தாக்கப்பட்டதோடு தீயிட்டுக் கொளுத்தப்பட்டன.
இந்நிலையில், அக்னிபத் திட்டம் குறித்து ஆய்வு செய்வதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் சிறப்பு நிபுணர்கள் குழுவை அமைத்து உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்குரைஞர் விஷால் திவாரி சார்பில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. மேலும், வன்முறைப் போராட்டம் தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு உத்தர பிரதேசம், பிகார், தெலங்கானா, ஹரியாணா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கு உத்தரவிடவும் மனுவில் கோரப்பட்டிருந்தது.
அந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென்று நீதிபதிகள் சி.டி.ரவிகுமார், சுதான்ஷு துலியா ஆகியோரைக் கொண்ட விடுமுறைக் கால அமர்வு முன் மனுதாரர் தரப்பில் செவ்வாய்க்கிழமை கோரப்பட்டது. அப்போது நீதிபதிகள் கூறுகையில், “”இந்த விவகாரம் தலைமை நீதிபதிக்கு அனுப்பிவைக்கப்படும். வழக்கைப் பட்டியலிடுவது குறித்து அவர் முடிவெடுப்பார்” என்றனர்.
அக்னிபத் திட்டத்துக்கு எதிராக வழக்குரைஞர் எம்.எல்.சர்மா சார்பில் மற்றொரு பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசு கேவியட் மனு தாக்கல்
அக்னிபத் திட்டத்துக்கு எதிரான மனுக்கள் தொடர்பாக எந்தவொரு உத்தரவையும் பிறப்பிக்கும் முன், தனது தரப்பு வாதத்தையும் கேட்க வேண்டும் என்று மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.