எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு முன்னால் மூதூர் வைத்தியசாலை சமூகத்தினர் போராட்டம்.

மூதூர் தள வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர்கள், தாதி உத்தியோகத்தர்கள், சுகாதாரப் பணியாளர்கள் ஒன்றிணைந்து மூதூர் பிரதான வீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு முன்னால் இன்று கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மூதூர் தள வைத்தியசாலையிலிருந்து நடைபவனியாக எரிபொருள் நிரப்பு நிலையம் வரை சென்று அங்கு கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன் காரணமாக மூதூர் தள வைத்தியசாலையின் செயற்பாடுகள் காலை 7 மணி முதல் பிற்பகல் 1 மணிவரை தடைப்பட்டிருந்தது. இதனால் வைத்திய சேவை பெறுவதற்காக வருகை தந்த நோயாளர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியிருந்தனர்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

“மூதூர் தள வைத்தியசாலையின் வைத்தியர்கள், தாதி உத்தியோகத்தர்கள், சுகாதார ஊழியர்கள் ஆகியோர் மூதூர் எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு எரிபொருள் நிரப்புவதற்குச் சென்றால் எங்களை எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்கள் கவனத்தில்கொள்வதில்லை. முன்னுரிமைப்படுத்தி எங்களுக்கு எரிபொருளை வழங்குவதில்லை. இதனால் அசௌகரியங்களுக்கு உள்ளாகுகின்றோம். இதற்குத் தீர்வைப் பெற்றுத் தருமாறு வலியுறுத்தியே இந்தக் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தோம்” – என்று போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

தாம் மக்களுக்கு வழங்கும் சேவை தொடர்பாகவும், தமது செயற்பாடுகள் ஸ்தம்பிதம் அடைந்தால் மக்கள் எதிர்நோக்க வேண்டி வரும் சிரமங்கள் தொடர்பாகவும் அவர்கள் கருத்துத் தெரிவித்தனர்.

இதையடுத்து ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற இடத்துக்கு மூதூர் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்துக்குச் சொந்தமான பிரதான எரிபொருள் நிரப்பு நிலையத்தின் தலைவர் வி.எம். நஹீப் வருகை தந்தார். வாரத்தில் ஒருநாள் மூதூர் தள வைத்தியசாலை உத்தியோகத்தர்கள்களுக்கு எரிபொருள் வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்வதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் அவர் வாக்குறுதி வழங்கியதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அவ்விடத்திலிருந்து கலைந்து சென்றனர்.

Leave A Reply

Your email address will not be published.