11ம் தேதி கூட்டப்பட்டுள்ள பொதுக்குழுக் கூட்டம் சட்டவிரோதமானது – ஓபிஎஸ்

அதிமுகவின் அமைப்புரீதியான தேர்தல் முடிவுகளுக்கு பொதுக்குழுக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்படாததால், தேர்தல் மூலம் தேர்வுசெய்யப்பட்ட புதிய உறுப்பினர்களை உள்ளடக்கிய பொதுக்குழுவே செல்லாது என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு விரிவான அறிக்கை அனுப்பியுள்ள அவர், அடுத்த மாதம் 11-ம் தேதி கூட்டப்பட்டுள்ள பொதுக்குழுக் கூட்டம் சட்டவிரோதமானது என்றும் தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் ஒற்றைத்தலைமை குறித்த குழப்பம் தீவிரமடைந்துள்ள நிலையில், கட்சியின் தற்போதைய நிகழ்வுகள் குறித்து தலைமைத் தேர்தல் ஆணையருக்கு ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் விரிவான அறிக்கை அனுப்பியுள்ளார்.

அதில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில், ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரை கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் மட்டுமே தேர்வுசெய்ய வேண்டும் என்று கட்சி விதிகளில் திருத்தம் செய்யப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில், தேர்தல் அறிவிக்கப்பட்டு, ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் போட்டியின்றி தேர்வுசெய்யப்பட்டதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். மேலும், மாவட்டச் செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கு பல்வேறு கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டதாகவும், அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில், கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தை ஜூன் 23-ம் தேதி நடத்த ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் ஜூன் 2-ம் தேதி அழைப்புவிடுத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்காக 23 வரைவு தீர்மானங்கள் தயாரிக்கப்பட்டு, அதற்கு ஒருங்கிணைப்பாளராகிய தான் ஒப்புதல் அளித்ததாகவும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

5 ஆண்டுகாலத்துக்கு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கான தேர்தல் நடத்தி முடிக்கப்பட்ட சூழலில், கட்சி நிர்வாகம் மற்றும் செயல்பாடுகளை சீர்குலைக்கும் வகையில், சிலர் ஒற்றைத்தலைமை என்ற குரலை எழுப்பியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், பொதுக் குழு கூட்டத்தில் 23 தீர்மானங்களைத் தவிர மற்ற தீர்மானங்கள் குறித்து எந்தவொரு முடிவையும் எடுக்கக் கூடாது என்று தீர்ப்பளித்ததாகவும், இதனை மீறி, அவைத் தலைவரை தேர்ந்தெடுப்பதாக புதிய தீர்மானம் கொண்டுவரப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தத் தீர்மானம் குறித்து தன்னிடம் தெரிவிக்கப்படவில்லை என்றும் ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியுள்ளார். பொதுக்குழுவில் உரிய விவாதம் நடத்தப்படாமலேயே 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்படுவதாக சி.வி.சண்முகம் அறிவித்தார்.

தேர்தலில் வெற்றிபெற்றவர்கள் முதல்முறையாக பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த நிலையில், அமைப்புரீதியான தேர்தல் முடிவுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்படாததால், இந்த பொதுக்குழுவே செல்லாததாக மாறிவிட்டதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

சட்டப்படி, கட்சியின் கூட்டங்களுக்கு தலைமைவகிப்பதற்கு மட்டுமே அதிகாரம் படைத்த அவைத் தலைவர், அடுத்த பொதுக்குழு கூட்டம் ஜூலை 11ஆம் தேதி நடைபெறும் என்று அறிவித்திருப்பது சட்டவிரோதமானது என்று அவர் தெரிவித்துள்ளார்.

உயர்நீதிமன்ற உத்தரவை மீறி, பொதுக்குழுவில் உறுப்பினர்களாக இல்லாதவர்களும் கூட்டத்தில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டதாகவும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இந்த சூழலில், ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரின் கையெழுத்து இல்லாமலேயே கட்சியின் தலைமை நிர்வாகிகள் கூட்டத்துக்கு நேற்று அழைப்பு விடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

எனவே, இந்தக் கூட்டம் செல்லாது என்றும், அடுத்த மாதம் 11ஆம் தேதி நடைபெறும் கூட்டத்துக்கு பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அழைப்புவிடுப்பது என்று தன்னிச்சையாக முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும், கட்சியின் பொருளாளர் என்ற முறையில், பொதுக்குழுக் கூட்டத்தில் கணக்குகளைத் தாக்கல் செய்ய தனக்கு அனுமதி அளிக்கப்படவில்லை என்றும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சென்னையில் ஓபிஎஸ் இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவரது வழக்கறிஞர் திருமாறன், 5 ஆண்டுகளுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம் தொடர்வார் என்று தெரிவித்தார். மேலும், தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டத்தைக் கூட்ட தலைமை நிலைய செயலாளருக்கு அதிகாரமில்லை என்றும் திருமாறன் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.