உச்ச கட்ட குழப்பத்தில் மகாராஷ்டிரா அரசியல் – கூட்டணி ஆட்சிக்கு நெருக்கடி

மகாராஷ்டிர அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி எம்.எல்.ஏக்கள் தெரிவித்துள்ளதால், உச்ச கட்ட குழம்பம் நிலவுகிறது. அதிருப்தி எம்எல்ஏ-க்கள் மீது ஜூலை 11 வரை நடவடிக்கை எடுக்க கூடாது என இடைக்கால உத்தரவை உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

மகாராஷ்டிராவில் அதிருப்தி எம்எல்ஏ-க்களால் சிவசேனா அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் ஏக்நாத் ஷிண்டே உட்பட 16 பேரை தகுதி நீக்கம் செய்வது தொடர்பாக விளக்கம் கேட்டு துணை சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியிருந்தார். திங்கட்கிழமை மாலைக்குள் பதிலளிக்க கெடு விதித்திருந்த நிலையில், நோட்டீஸை எதிர்த்து ஏக்நாத் ஷிண்டே தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

அந்த மனுவில், தங்களுக்கு எதிராக வழங்கப்பட்டுள்ள நோட்டீஸ் சட்ட விரோதமானது என குறிப்பிடப்பட்டு இருந்தது. மேலும், 38 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது ஆதரவை வாபஸ் பெற்றுள்ளதால் மகா விகாஸ் அகாதி கூட்டணி பெரும்பான்மையை இழந்து விட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, 16 பேர் மீதான தகுதி நீக்க நோட்டீஸ் தொடர்பாக, துணை சபாநாயகர் நர்ஹரி ஜிர்வால் உரிய பதிலளிக்க உத்தரவிடப்பட்டது. மேலும், அதிருப்தி எம்எல்ஏ-க்கள் உரிய விளக்கம் அளிக்க, ஜூலை 11-ம் தேதி வரை கால அவகாசம் வழங்க வேண்டும் என்றும்அதுவரை, எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.அத்துடன், அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கவும் மாநில அரசுக்கு உத்தரவிட்டது.

அதிருப்தி எம்எல்ஏ-க்கள் மகாராஷ்டிர அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக கூறியதை அடுத்து, கோண்டியா தொகுதியில் சுயேச்சை எம்எல்ஏ, வினோத் அகர்வாலின் அலுவலகத்தை சிவசேனா கட்சியினர் அடித்து நொறுக்கினர். அரசுக்கு எதிரான நிலைப்பாடு எடுத்துள்ள 9 அமைச்சர்களில் 4 பேரின் பொறுப்புகள் பறிக்கப்பட்டுள்ளன.

இதில், மாநில உயர் கல்வி அமைச்சர் உதய் சாமந்த் வகித்து வந்த உயர் கல்வி அமைச்சர் பொறுப்பை, உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்ய தாக்கரே கூடுதலாக கவனிப்பார் என கட்சித் தலைமை அறிவித்தது. மக்கள் நல பணிகள் பாதிக்கப்பட கூடாது என்பதற்காக இந்த முடிவு எடுத்ததாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. தங்களது அரசை யாரும் வீழ்த்த முடியாது என்று ஆதித்ய தாக்கரே நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதனிடையே, பணமோசடி வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராக, சிவசேன செய்தித் தொடர்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சஞ்சய் ராவத்துக்கு, அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. இதுகுறித்து மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அமலாக்கத்துறை தனக்கு சம்மன் அனுப்பும் என்பது எதிர்பார்த்த ஒன்று தான் என்று கூறினார். யாருக்கும் மண்டியிட்டு அடிபணிய போகமாட்டேன் என்றும் ராவத் கூறியுள்ளார். அமலாக்கத்துறை முன் ஆஜராவதற்கு கால அவகாசம் கோருவேன் எனவும் சஞ்சய் ராவத் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.