பாலியல் வன்புணர்வுக்கு ஆளான சிறுமியின் கருவை கலைக்க உயர் நீதிமன்றம் அனுமதி

பாலியல் வன்புணர்வு பாதிப்புக்கு ஆளான சிறுமியின் கருவை கலைக்க மும்பை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளை ஒரு கொலை குற்றத்திற்காக கைதான சிறுமியின் மனுவை விசாரித்தது. அதில், மனு தாக்கல் செய்த சிறுமி பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகி கர்ப்பமடைந்துள்ளார். அவர் கர்ப்பமடைந்து தற்போது 16ஆவது வாரம் ஆகியுள்ள நிலையில், அந்த சிறுமியின் பொருளாதார சூழல் மற்றும் மன நலம் சார்ந்து கருவை சுமப்பதில் அவருக்கு விருப்பமில்லை.

இந்த சூழலில் அவர் குழந்தையை பெற்றெடுத்து முறையாக வளர்ப்பது இயலாத காரியம் என்பதால், தனது கருவை கலைக்க அனுமதி வேண்டும் எனக் கோரியுள்ளார்.மேலும் இந்த கர்ப்பம் என்பது அவர் விரும்பாமல் கட்டாயத்தின் பேரில் ஏற்பட்ட ஒன்று என மனுவில் கூறியுள்ளார். இந்த மனுவை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஏஎஸ் சந்துர்கார் மற்றும் ஊர்மிளா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. மனு தாரரின் வாதத்தை ஏற்ற நீதிபதிகள், அரசியல் சாசன பிரிவு 21இன் கீழ் அந்த சிறுமிக்கு கருவை கலைக்க உரிமை உண்டு.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

அந்த சிறுமியை கட்டாயப்படுத்தி குழந்தை பெற வைக்க முடியாது, குழந்தைப் பேறு வேண்டுமா அல்லது வேண்டாமா என்பதை தேர்வு செய்யும் உரிமை அவருக்கு உண்டு என நீதிபதிகள் கூறியுள்ளனர். மேலும், மனு தாரர் ஒரு சிறார் என்பதும், அவருக்கு திருமணம் ஆகவில்லை என்பதும் முக்கிய அம்சம் எனக் கூறியுள்ள நீதிமன்றம், பாலியல் சீண்டலால் பாதிக்கப்பட்ட அவரின் மன நலனை புரிந்து கொள்ள முடிகிறது என நீதிமன்றம் கூறியுள்ளது.

இவை அனைத்தையும் முன்வைத்து பார்க்கையில், அவரின் குழந்தை அவருக்கு சுமையாக மட்டுமல்லாது, மன நலனையும் வெகுவாக பாதிக்கும் என்பதால், சிறுமிக்கு கருவை கலைத்துக் கொள்ள உரிமை உள்ளது என உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.