35 மாணவர்களுக்கு 9 ஆசிரியர்கள்.. மாதம் ரூ.12 லட்சம் ஊதியம் வழங்கிவரும் தமிழக அரசு

சென்னை நகரின் மையப் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு பள்ளி ஒன்றில் வெறும் 35 மாணவர்கள் மட்டுமே கல்வி பயிலும் நிலையில் அவர்களுக்கு பாடம் எடுக்க 9 ஆசிரியர்கள் உள்ளனர். 9 ஆசிரியர்கள் மற்றும் 2 ஊழியர்களின் ஊதியத்திற்காக மாதம் ரூ.12 லட்சத்தை தமிழக அரசு செலவிட்டு வருகிறது.

பல்வேறு அரசு பள்ளிகளில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் படிக்கும் நிலையில் , சென்னை நகரின் மையப்பகுதியில் உள்ள எழும்பூர் அரசு அம்பேத்கர் மேல்நிலைப் பள்ளியில், வெறும் 34 மாணவர்கள் மட்டுமே படித்து வருகின்றனர். இவர்களுக்காக ஒன்பது ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் 2 பேர் என 11 பேர் பணிபுரிந்து வருகின்றனர் அவர்களுக்காக , மாதம் 12 லட்சம் ரூபாய் அரசு ஊதியம் வழங்கி வருகிறது.

பல அரசு பள்ளிகளில் போதிய எண்ணிக்கையில் மாணவர்கள் இருந்தும் ஆசிரியர்கள் இல்லாத நிலையில் மாணவர் எண்ணிக்கை குறைவாக உள்ள இந்தபள்ளியில் தேவைக்கு அதிகமாக ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். அம்பேத்கர் அரசு மேல்நிலைப்பள்ளியில் அதிகபட்சமாக 2011- 12 ஆம் கல்வி ஆண்டில் 348 பேர் படித்திருக்கின்றனர். 2016 – 17 ஆம் கல்வி ஆண்டில் இருந்து மாணவர்கள் எண்ணிக்கை 100 ற்கு கீழாக சரிந்து, இந்த ஆண்டு தற்போது வெறும் 34 மாணவர்கள் மட்டுமே படித்து வருகின்றனர்.

6ம் வகுப்பில் ஒரு மாணவர் கூட கிடையாது . ஏழாம் வகுப்பில் 2 பேர், 8ம் வகுப்பில் ஒரு மாணவரும், ஒன்பதாம் வகுப்பில் 3 பேர் , 10ம் வகுப்பில் 5 பேர், 11ம் வகுப்பில் 4 பேர், 12ஆம் வகுப்பில் 19 பேர் என 34 பேர் மட்டுமே தற்போது பயின்று வருகின்றனர். 20க்கும் அதிகமான ஆசிரியர்கள் இங்கே பணி புரிந்த நிலையில், போதிய மாணவர்கள் இல்லாததால் பட்டதாரி ஆசிரியர்கள் அனைவரும் வேறு பள்ளிகளுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

ஆனாலும் தற்போது இந்த 34 மாணவர்களுக்கு, 8 முதுகலை ஆசிரியர்கள், ஒரு தலைமை ஆசிரியர், ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் 2 பேர் என, 11 பேர் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்காக மாதம் 12 லட்சம் ரூபாய் கல்வித்துறை சம்பளம் வழங்கி வருகிறது. வேலையே சுத்தமாக இல்லை என்பதால், அமைதியாக பல ஆசிரியர்கள் பல ஆண்டுகளாக இதே பள்ளியில் காலத்தை ஓட்டி வருகின்றனர்.

தண்ணீர் வசதி இல்லாமலும் , கழிவறை வசதி இல்லாமலும் பல்வேறு பிரச்சனைகள் இப்பள்ளியில் உள்ளது. பள்ளி மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கவோ, அல்லது தேவைக்கு அதிகமாக உள்ள ஆசிரியர்களை தேவை உள்ள பள்ளிகளுக்கு மாற்றம் செய்யவோ முன்வரவேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

Leave A Reply

Your email address will not be published.