மலையில் இருந்து விழுந்து நொறுங்கிய பேருந்து – பள்ளி மாணவர்கள் உள்பட 16 பேர் பலி

இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் மலைப் பகுதியில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் 16 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இமாச்சலப் பிரதேசம் குல்லு மாவட்டத்தில் பேருந்து ஒன்று சைஞ்ச் என்ற பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து சென்ற பாதை மலைப் பாங்கான இடம் என்ற நிலையில், காலை 8.30 மணி அளவில் ஜங்லா என்ற இடத்தில் சென்றுகொண்டிருந்த போது தவறி பள்ளத்தாக்கில் விழுந்தது.

இந்த கோர விபத்தில் சிக்கி இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளனர். பேருந்தில் 40க்கும் மேற்பட்டோர் பயணம் செய்ததாக கூறப்படும் நிலையில், இதில் பெரும்பாலானோர் பள்ளி மாணவர்கள் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. விபத்து குறித்து தகவல் கிடைத்ததும், குல்லு துணை ஆணையர் அஷுதோஷ் கர்க் சம்பவயிடத்திற்கு நேரில் விரைந்துள்ளார். அங்குள்ள உள்ளூர் வாசிகளின் உதவியுடன் காவல்துறை மீட்பு பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

இந்த பேருந்து விபத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி, மாநில முதலமைச்சர் ஜெய்ராம் தாக்கூர் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில், ’இமாச்சல் மாநிலம் குல்லுவில் நடைபெற்ற பேருந்து விபத்து கவலையை தருகிறது. பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு எனது ஆழ்ந்து இரங்கல். மேலும் காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய விரும்புகிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவியை விரைந்து மேற்கொள்ள உள்ளூர் நிர்வாகத்திடம் கேட்டுக்கொள்கிறேன்.

விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம், காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50,000 நிவாரண தொகை பிரதமர் நிதியில் இருந்து வழங்கப்படும்’ எனத் தெரிவித்துள்ளார்.

மாநில முதலமைச்சர் ஜெய்ராம் தாக்கூர் தனது ட்விட்டர் பதிவில், ‘குல்லு விபத்து குறித்த செய்தி பெரும் கவலையை தருகிறது. மொத்த மாவட்ட நிர்வாகமும் சம்பவ இடத்திற்கு விரைந்து பணியாற்றி வருகிறது. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன்’ என்றார்.

Leave A Reply

Your email address will not be published.