23 லட்சம் ஊதியத்தை திருப்பி கொடுத்த பேராசிரியர்! சொன்ன வியக்க வைக்கும் காரணம்

இந்திய மாநிலம் பீகாரில் மூன்று ஆண்டுகளாக பாடங்கள் எதுவும் எடுக்காததால், தனது ஊதியத்தொகை 23 லட்சத்தை பேராசிரியர் ஒருவர் திருப்பி கொடுத்து ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

பீகார் மாநிலம் முசாபர்பூரில் உள்ள தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வருபவர் லாலன் குமார்(33).

இந்தி பாடம் எடுத்து வரும் இவர், பீகார் பல்கலைக்கழக பதிவாளரிடம் 23 லட்சத்து 82 ஆயிரத்து 228 ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். இந்த தொகையானது, லாலன் குமார் 2019ஆம் ஆண்டு முதல் மூன்று ஆண்டுகளில் பெற்ற ஊதியத்தொகை ஆகும்.

அவரிடம் இதுகுறித்து கேட்டபோது லாலன் கூறிய காரணம் வியக்க வைத்தது. அவர் கூறும்போது, ‘பாடம் எடுக்காமல் ஊதியம் பெற எனது மனசாட்சி அனுமதிக்கவில்லை. ஒன்லைன் வகுப்புகளின்போது கூட இந்தி வகுப்புகளுக்கு ஒரு சில மாணவர்களே வந்தனர். ஐந்து ஆண்டுகள் கற்பிக்காமல் ஊதியம் பெற்றால் அது எனது கல்வி இறந்ததற்கு சமம்’ என தெரிவித்துள்ளார்.

மேலும், இதுதொடர்பாக கல்லூரி முதல்வர் அவரிடம் கேட்டபோது, மாணவர்கள் வராததால் மட்டுமல்ல என்றும், முதுகலை துறைக்கு இடமாற்றம் வேண்டி விண்ணப்பித்ததற்காகவும் தான் என்றும் லாலன் குமார் கூறியுள்ளார். எனினும் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

Leave A Reply

Your email address will not be published.