எரிபொருள் வரிசையில் காத்திருந்த மேலும் இருவர் பரிதாப உயிரிழப்பு! – இதுவரை 16 பேர் அவலச் சாவு.

பம்பலப்பிட்டி மற்றும் பயாகல பகுதிகளில் எரிபொருளுக்காக வரிசைகளில் காத்திருந்த வயோதிபர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.

பம்பலப்பிட்டி ஐ.ஓ.சி. எரிபொருள் நிரப்பு நிலையத்துக்குச் சென்ற 60 வயதான ஒருவர் திடீரென சுகயீனமுற்று கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நேற்றிரவு சேர்க்கப்பட்டார். குறித்த நபர் இன்று அதிகாலை உயிரிழந்தார் என்று பொலிஸார் கூறினர்.

புத்தளம் – மதுரங்குளி பகுதியைச் சேர்ந்த குறித்த நபர், இராஜகிரிய – ஒபேசேகரபுர பகுதியிலுள்ள தமது மகளுடன் வசித்து வந்த நிலையில், நேற்றிரவு எரிபொருள் பெற்றுக்கொள்வதற்காகச் சென்றுள்ளார்.

இவரின் ஜனாஸா கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், வெலிக்கடைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, பயாகல பகுதியில் எரிபொருள் வரிசையில் காத்திருந்த 63 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார்.

எரிபொருள் வரிசையில் காத்திருந்தபோது திடீர் சுகயீனமுற்ற நிலையில் களுத்துறை – நாகொடை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட இவர், இன்று அதிகாலை உயிரிழந்தார்.

இந்த இரு மரணங்களுடன் எரிபொருள் வரிசைகளில் பதிவாகிய மரணங்களின் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.