சசிகலா முன்னிலையில் அதிமுகவில் கட்சியை இணைக்கும் திவாகரன்

சசிகலாவின் சகோதரர் திவாகரன் தனது அண்ணா திராவிடர் கழகத்தை அதிமுகவுடன் நாளை மறுநாள் (ஜூலை 12ம் தேதி) இணைக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு சென்றார். அப்போது தர்மயுத்தம் நடத்திக்கொண்டிருந்த ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் அதிமுகவில் இணைந்து துணை முதல்வராகவும் பொறுப்பேற்றார். இதனையடுத்து டி.டி.வி.தினகரன், சசிகலாவின் சகோதரர் திவாகரன் ஆகியோர் அதிமுகவில் இருந்து வெளியேறினர்.

தினகரன், திவாகரன் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது. இச்சூழலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை டிடிவி தினகரன் தொடங்கி நடத்தி வருகிறார். இதனிடையே, சசிகலா சகோதரர் திவாகரன் அண்ணா திராவிடர் கழகம் என்னும் பெயரில் கட்சியை கடந்த 2018ம் ஆண்டு தொடங்கினார். திவாகரன் கட்சியில் தனது பெயரையும் படத்தையும் பயன்படுத்தக்கூடாது என வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் சசிகலா. இதைத்தொடர்ந்து ‘சசிகலா இனி என் சகோதரி இல்லை’ என செய்தியாளர்கள் சந்திப்பின்போது திவாகரன் அறிவித்தார்.

இந்நிலையில், தற்போது தனது அண்ணா திராவிடர் கழகத்தை அதிமுகவுடன் திவாகரன் இணைக்கவுள்ளார். இது தொடர்பாக சசிகலா வெளியிட்டுள்ள அறிவிப்பில், தாய் கழகமான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தோடு, அண்ணா திராவிடர் கழகத்தை இணைக்கும் விழா வருகின்றன 12.07.2022 அன்று காலை 11 மணிக்கு தஞ்சாவூரில் அமைந்துள்ள தமிழரசி திருமண மண்டபத்தில் நடைபெறும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுகவின் ஒற்றை தலைமை தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி தரப்பு இடையேயான மோதல் போக்கு உச்ச கட்டத்தில் உள்ள சூழலில் அதிமுகவின் பொதுச் செயலாளர் என்ற பெயரில் அறிவிப்பு வெளியிட்டுவரும் சசிகலா, தற்போது அதிமுகவுடன் அண்ணா திராவிடர் கழகத்தை இணைக்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது பரபரப்பை மேலும் அதிகரித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.