குரூப் 4 தேர்வு: தமிழகம் முழுவதும் நாளை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிப்பு…

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் குரூப் 4 பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு நாளை நடைபெறுகிறது. இதையொட்டி, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்கழகம் சார்பில், தேர்வு மையங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், நிள அளவையாளர், வரைவாளர் உள்ளிட்ட பதவிகளில் காலியாக உள்ள 7,301 பணியிடங்களுக்கான குரூப்- 4 தேர்வை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி. நாளை நடத்துகிறது.

இதற்காக தமிழகம் முழுவதும் சுமார் 7,689 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நாளை காலை 09.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெறவுள்ள இத்தேர்வை சுமார் 22.02 லட்சம் பேர் எழுதுகின்றனர். சென்னையில் 503 தேர்வு மையங்களில் சுமார் 1.56 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர்.

இந்நிலையில், குரூப் 4 தேர்வு நடைபெறுவதையொட்டி தமிழகம் முழுவதும் நாளை சிறப்பு பேருந்துகளை தமிழ்நாடு போக்குவரத்துறை இயக்குகிறது. அந்தந்த மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தல்படி, மையங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப நாளை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

தேர்வு மையங்கள் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் இந்த சிறப்பு பேருந்துகள் முறையாக நின்று செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதை போக்குவரத்துத்துறை அதிகாரிகள் கண்காணிப்பர் எனவும் போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.