‘ஷீரடி சாய்பாபாவிற்கு வைரம் பதித்த தங்க கிரீடம்’ 80 வயதில் ஆசையை நிறைவேற்றிய மருத்துவர் !

தன்னுடைய பணிக்கால ஓய்விற்குப்பிறகும், அமெரிக்காவிற்கு சென்றதோடு அங்கு வேலைப்பார்த்து கிடைத்தப் பணத்தை வைத்து சாய்பாபா கோவிலுக்கு ரூ. 33 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க வைரங்கள் பதித்த தங்ககீரிடத்தை சாய்பாபா கோவிலுக்கு 80 வயதான மருத்துவர் நன்கொடையாக வழங்கியுள்ளார்.

ஹைதராபாத்தை சேர்ந்த 80 வயதான மருத்துவர் மந்தா ராமகிருஷ்ணா கடந்த 1992 ஆம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலத்தின் ஷீரடி நகரில் உள்ள சாய்பாபா கோவிலுக்கு தன்னுடைய மனைவியுடன் சென்றிருக்கிறார். அப்போது கோவிலில் உள்ள அர்ச்சகர் ஒருவர், சாய்பாபாவின் கிரீடத்தை காட்டி, இதுப்போன்ற ஒன்றை தானமாக வழங்குமாறு மருத்துவரிடம் வலியுறுத்தியுள்ளார். அப்போது அவர்களிடம் கிரீடம் வாங்குவதற்காக பணம் இல்லாமல் இருந்தது. ஆனால் எப்படியாவது விலைமதிக்கத்தக்க தங்க கிரீடத்தை வழங்கிவிடுவோம் என நினைப்பு மட்டும் இருந்துள்ளது.

இந்நிலையில் தான் 30 ஆண்டுகளுக்குப்பிறகு அதாவது தனது 80 வயதில் கடந்த வெள்ளிக்கிழமை 707 கிராம் எடையுடன் 35 கிராம் அமெரிக்க வைரக்கற்கள் பதிக்கப்பட்டுள்ள தங்க கிரீடத்தை மருத்துவர் நன்கொடையாக வழங்கியுள்ளதாக ஸ்ரீசாய்பாபா அறக்கட்டளையின் தலைமை செயல் அதிகாரி தெரிவித்தார்.

இதுகுறித்து நன்கொடை வழங்கிய டாக்டர் மந்தா ராமகிருஷ்ணா தெரிவிக்கையில், சாய்பாபாவிற்கு விலை மதிப்புள்ள தங்க கிரீடத்தை வழங்குவதாக நானும் எனது மனைவியும் கூறியிருந்தோம். ஆனால் தன்னிடம் அப்போது போதுமான அளவு பணமில்லை. எனவே தான் என்னுடைய ஓய்வுக்காலத்திற்கு பிறகு அமெரிக்கா சென்று அங்கு 15 ஆண்டுகள் பணியாற்றினேன். அதில் கிடைத்த பணத்தை வைத்து தான் தற்போது சாய்பாபாவிற்கு நானும், எனது மனைவியும் சேர்ந்து வழங்க வேண்டிய நன்கொடையை வழங்கியதாக கூறினார். ஆனால் துர்திஷ்டவசமாக மனைவி இறந்துவிட்டதால் இப்போது அவர் இல்லை. ஆனால் அவருடைய ஆசையை நிறைவேற்றி விட்டேன் என்ற மனநிம்மதி தனக்கு உள்ளதாக 80 வயதான மருத்துவர் மந்தா ராமகிருஷ்ணா பெருமையுடன் கூறுகிறார்.

மனைவி இல்லை என்றாலும் அவரின் கனவை நிறைவேற்றுவதற்கு என்னால் முடிந்த வேலைகளை செய்தேன் எனவும் தெரிவித்தார். முன்னதாக கிரீடத்தைத் தானம் செய்யும் போது மருத்துவர் ராமகிருஷ்ணா தனது மனைவியின் புகைப்படத்தை வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தன்னுடைய மனைவியுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட சபதத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக 80 வயதாலும் அயராது உழைத்த மருத்துவர் செயல் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.