ஆட்சியமைக்க நாம் வருவோம் என்று நம்பிக்கைவைப்பது முட்டாள்தனமானது!

“காலிமுகத்திடலில் அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தி, அராஜகம் புரிந்தவர்களுடன் ஒன்றாக அமருவதற்கு நாங்கள் தயாரில்லை. ஆட்சியமைக்க நாங்கள் வருவோம் என்று அவர்கள் நம்பிக்கை வைப்பது முட்டாள்தனமானது.”

– இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும்போது தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

“புதிய ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டார். அவர் நியமிக்கப்பட்ட விதம் தொடர்பில் பல விமர்சனங்கள் உள்ளன. எனினும், அரசமைப்பின் பிரகாரம் அவர் நியமிக்கப்பட்டதால், அவருக்குரிய மதிப்பை வழங்குகின்றோம். பதவியேற்ற ஜனாதிபதியைச் சந்தித்து நாம் கலந்துரையாடினோம்.

நாடாளுமன்றத்துக்கு அதிகாரத்தை வழங்கும் வகையில் இணைந்து செயற்பட எம்மை அழைத்தார். நாட்டின் 220 இலட்சம் மக்களுக்கு நன்மைகளை ஆற்ற நாம் ஒன்றிணைய வேண்டும் என்றார். கடந்த கால சம்பவங்களைப் புறந்தள்ளி அவருடன் இணைந்து செயற்பட நாம் தயாராக இருந்தோம்.

ஆனால், கடந்த 21ஆம் திகதி நள்ளிரவு மோசமான தீர்மானம் எடுக்கப்பட்டது. வன்முறை தலைதூக்கியது. அரச பயங்கரவாதம் கட்டவிழுத்துவிடப்பட்டது.

இதன்பின்னரும் ஆட்சியமைக்க நாம் வருவோம் என்று நம்பிக்கை வைப்பது முட்டாள்தனமானது. மக்கள் ஆணைக்கு எதிரான, காட்டிக்கொடுக்கும் தீர்மானத்தை எடுக்க ஐக்கிய மக்கள் சக்தியோ, கூட்டணியோ தயாரில்லை.

நாம் எவருக்கும் முட்டுக்கொடுக்கமாட்டோம். இந்த அசிங்கமான அரசியல் கொள்கைக்கு கைதூக்க நாம் தயாரில்லை.

கடந்த 21ஆம் திகதி நள்ளிரவு காலிமுகத்திடலில் அப்பாவி மக்களே இருந்தனர். மறுநாள் வெளியேறுவதாக அவர்கள் அறிவித்தனர். இத்தகைய சூழ்நிலையிலும், மிகவும் அனுபவமிக்க ரணில் விக்கிரமசிங்க, மோசமான ஒரு ஆலோசனையைக் கேட்டு, வன்முறைக்கு ஆணையிடுவார் என நான் நினைக்கவில்லை.

இத்தகையவர்களுடன் ஒன்றாக அமரும் அளவுக்கு நாம் தேசத்துரோகிகள் அல்லர். அவ்வாறு செய்யவும் தயாரில்லை.

எனினும், நாட்டுக்காக எம்மால் முடிந்தவரை, எல்லையற்ற உதவிகளை வழங்கத் தயாராகவுள்ளோம்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.