தேர்தல்தான் ஒரே வழி! – சபையில் கஜேந்திரன் தெரிவிப்பு.

“பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டுமாயின் தேர்தலுக்குச் செல்லுங்கள். தமிழ்த் தேசத்தை அங்கீகரிக்கும் வகையில் சமஷ்டி அரசமைப்பைக் கொண்டு வாருங்கள். அப்போது நீங்களும் நாங்களும் சேர்ந்து நாட்டை அபிவிருத்தி செய்யலாம்.”

இவ்வாறு அரசிடம் இன்று இடித்துரைத்தார் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற அவசரகால ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அதன்போது கஜேந்திரன் எம்.பி மேலும் தெரிவிக்கையில்,

“39 ஆண்டுகளுக்கு முன்னர் தற்போதைய ஜனாதிபதி அன்று கல்வி அமைச்சராக இருந்தபோது அவரின் மாமனார் ஜனாதிபதியாக இருந்த வேளையில் சகல அதிகாரங்களையும் கைகளிலேயே வைத்துக்கொண்டு தமிழர்களுக்கு எதிரான வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டன. தமிழர்களின் வீடுகள் கொள்ளையடிக்கப்பட்டு, மக்கள் கொல்லப்பட்டனர். இப்போது 39 வருடங்களாகியுள்ளன. அன்று உங்களின் காடையர்கள் எங்களின் பெண்களைப் பாலியல் வல்லுறவுக்குட்படுத்திக் கொடூரமாக நடந்துகொண்டபோது அதற்கு எதிராகச் செயற்பட்டவர்களைப் பயங்கரவாதிகள் என்றீர்கள். இதனை ஒடுக்க சட்டங்களை இயற்சி நடவடிக்கை எடுத்தீர்கள். அதன் விளைவு இன்றும் இருக்கின்றது.

தமிழருக்கு எதிராக நீட்டிய துப்பாக்கிகள் சிங்களவர்களுக்கு எதிராகவும் திரும்பும் என்று எங்களின் தலைவர் அன்று கூறியிருந்தார். இந்த நிலைமை தற்போது ஏற்பட்டுள்ளது. உங்களின் கைகளால் உங்களின் மக்களின் கண்களில் குத்தும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

மக்களால் நிராகரிக்கப்பட்ட ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர், மக்கள் விரட்டியடிக்கப்படுவார்கள் என்ற அச்சத்தில் ஏதோவொரு வகையில் அந்தப் போராட்டங்களை ஒடுக்குவதற்காக இந்த அவசரகாலச் சட்டத்தைக் கையில் எடுத்துள்ளீர்கள். இது உங்களின் மக்களுக்கு எதிரான மோசமான இரத்த ஆற்றுக்கான வழியை ஏற்படுத்தும் என்பதனையும் கூறிக்கொள்கின்றோம்.

இந்த நாடாளுமன்றத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கையில்லை. நீங்கள் தேர்தலுக்கு செல்வதன் ஊடாக மட்டுமே உங்களின் மக்களின் நம்பிக்கையை ஏற்படுத்தி நாடாளுமன்றமாக இது இருக்கும்.

கோட்டாபய ராஜபக்சவுக்கே மூன்றில் இரண்டு அதிகாரம் வழங்கப்பட்டது. அவரையே மக்கள் வெளியேற கூறிவிட்டார்கள். அப்படியென்றால் அவர்கள் உங்களின் அரசுக்கான ஆணையையே மீளப் பெற்றுவிட்டார்கள் என்றே கூற வேண்டும். இதனால் தொடர்ந்தும் அதிகாரத்தை வைத்துக்கொண்டு செயற்பட்டால் நீங்கள் பாசிச ஆட்சியையே செய்கின்றீர்கள். நாட்டுக்காகத்தான் பேசுகின்றீர்கள் என்றால் தேர்தலுக்குச் செல்லுங்கள். இல்லையென்றால் போராட்டக்காரர்கள் விரட்டி விரட்டியே கைதுசெய்யப்படுவார்கள்.

நாங்கள் போதியளவு அனுபவங்களைக் கொண்டுள்ளோம். பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் மிக மோசமாகத் துன்புறுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறான கொடூரங்களை அனுபவித்துள்ளோம். அதற்காக சிங்களவர்களும் அதனை அனுபவிக்க வேண்டும் என்று கூறவில்லை. பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டுமாயின் தேர்தலுக்குச் செல்லுங்கள். தமிழ்த் தேசத்தை அங்கீகரிக்கும் வகையில் சமஷ்டி அரசமைப்பைக் கொண்டு வாருங்கள். அப்போது நீங்களும் நாங்களும் சேர்ந்து நாட்டை அபிவிருத்தி செய்யலாம்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.