செஸ் ஒலிம்பியாட் பிரமாண்டமான தொடக்க விழா.. பிரதமர் மோடி இன்று சென்னை வருகை

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை சென்னை வருகிறார்.

செஸ் விளையாட்டின் ஒலிம்பிக் என்று அழைக்கப்படும் செஸ் ஒலிம்பியாட் போட்டி 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரம் அருகே பூஞ்சேரி கிராமத்தில் உள்ள போர் பாயிண்ட்ஸ் நட்சத்திர ஓட்டலில் இன்று தொடங்குகிறது. ஆகஸ்ட் 10-ம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டிக்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பிரமாண்ட தொடக்க விழா:

செஸ் ஒலிம்பியாட் போட்டியின் பிரமாண்டமான தொடக்க விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது. இதில், தமிழகத்தின் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைக்கிறார். இந்நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என் ரவி மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாகூர் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர். சினிமா பிரபலங்களுக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது

சென்னை வரும் பிரதமர் மோடி:

செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைப்பதற்காக அகமதாபாத்திலிருந்து தனி விமானம் மூலம், மாலை 4.45 மணிக்கு சென்னை வரும் பிரதமர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம், ஐஎன்எஸ் அடையார் விமான தளத்துக்கு செல்கிறார். பின்னர் கார் மூலம், நேரு உள் விளையாட்டு அரங்கிற்கு செல்கிறார்.செஸ் போட்டி தொடக்க விழாவில் பங்கேற்றுவிட்டு, கார் மூலம் ஆளுநர் மாளிகைக்கு செல்கிறார்.

பிரதமர் பயண விவரம்:

ஆளுநர் மாளிகையில் இரவில் தங்கும் பிரதமர், 29-ம் தேதி காலை 10 மணிக்கு அண்ணா பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார். பட்டமளிப்பு விழா முடிவடைந்தபிறகு, சென்னை விமான நிலையம் செல்லும் பிரதமர், அங்கிருந்து மீண்டும் அகமதாபாத் செல்ல திட்டமிட்டுள்ளார்.

தமிழகத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு:

பிரதமர் வருகையையொட்டி இன்றும், நாளையும் சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்படுகிறது. தேசிய பாதுகாப்பு படையினர், மத்திய-மாநில உளவு பிரிவு போலீசார், உள்ளூர் போலீஸ் அதிகாரிகள், ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்பு படை என 22 ஆயிரம் போலீசார் 5 அடுக்காக நின்று பிரதமருக்கு பாதுகாப்பு அளிப்பர். நேரு ஸ்டேடியம் மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் ஆகியவை போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அசம்பாவிதங்கள் நடைபெறுவதை தவிர்க்கும் வகையில் காவல்துறையினர் ரோந்து பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.

ட்ரோன்கள் பறக்க தடை:

இரு நாட்களும் சென்னையில் டிரோன்கள், ஹைட்ரஜன் பலூன்கள் போன்றவை பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரதமர் வருகை குறித்து தவறான கருத்து பதிவிடுவோர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இதற்காக சமூகவலைதளங்களை கண்காணித்து வருவதாகவும் சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா மற்றும் பிரதமர் மோடி வருகையையொட்டி இன்று நண்பகல் முதல் இரவு 9 மணி வரை ராஜா முத்தையா சாலை, ஈ.வே.ரா பெரியார் சாலை, அண்ணாசாலை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. இதன்காரணமாக இந்த சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது

Leave A Reply

Your email address will not be published.