அவசரகாலச் சட்டத்துக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மனு!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் பிரகடனப்படுத்தப்பட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள அவசரகால ஒழுங்குவிதிகளைச் சவாலுக்கு உட்படுத்தி உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு ஒன்று இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அது தொடர்பான வர்த்தமானியை வலுவிழக்கச் செய்வதற்கான உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரான சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்தியுள்ளமையால், அரசமைப்பில் உறுதி செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளது என அவர் அந்த மனுவின் ஊடாக சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனால் அது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை வழுவிழக்கச் செய்து உத்தரவிடுமாறு மனுதாரர் உயர்நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

குறித்த மனுவில் பிரதிவாதிகளாக ஜனாதிபதி சார்பில் சட்டமா அதிபர், முன்னாள் ஜனாதிபதி செயலாளர் காமினி செனரத், தற்போதைய ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன ஆகியோரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.